யாழில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை போராட்டத்திற்கு அழைப்பு

யாழ், ஜுன் 18

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தென்மராட்சி சிவில் அமைப்பின் பிரதிநிதி க.அருந்தவபாலன் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தார்.

இவ் ஊடக சந்திப்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம், குரலற்றவர்களின் குரல் அமைப்பு, அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தென்மராட்சி சிவில் அமைப்பின் பிரதிநிதி க.அருந்தவபாலன் போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமை அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறை தேவையற்றது என்று இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்து அதை மூடிவிடுமாறு கோரியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவாவில் 50 ஆம் கூட்டத்தொடரில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது. சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் அதை முற்றாக நிராகரிக்கிறோம்.

2021 ஜனவரி 15 ஆம் திகதியன்று அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் குடிசார் அமைப்புகளும் இணைந்து ஒற்றுமையாகக் கோரியிருந்தது போல, சிரியாவுக்கு ஏற்படுத்தப்பட்டதைப் போல முற்றிலும் சுயாதீனமான, சர்வதேச, விசாரணைப் பொறிமுறை ஒன்று நேரடியாக ஐ.நா. பொதுச்சபையின் கிளையமைப்பாக உருவாக்கப்படவேண்டும்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்சலேற் அம்மையாரின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவதற்கு முன்னதாக அவரது அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறையை மேலும் கனதியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் தரமுயர்த்தவேண்டும்.

அதற்கேற்ற நிதி உதவியை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைப் போக்க நிதி உதவி செய்ய முன்வரும் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் தீவில், குறிப்பாக வடக்கு-கிழக்கில், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைப் போக்கி, ஈழத்தமிழர் தேசத்துக்கும் தமிழ்பேசுவோர் உள்ளிட்ட எந்த ஏனைய மக்களுக்கும் எதிரான இன அழிப்போ ஒடுக்குமுறையோ தொடராத வகையில் அரசியல் உறுதிநிலையைத் தீவில் ஏற்படுத்தியே உதவியைச் செய்ய முன்வரவேண்டும். ஏற்கனவே சமாதானப் பேச்சுக்கள் குழப்பப்பட்டதற்கும், சுனாமி அனர்த்தத்தின் பின்னான மீள்கட்டுமானப் பொறிமுறை மறுக்கப்பட்டது போன்றவற்றில் இருந்து கற்ற பாடங்களோடு அரசியல் உறுதிநிலை தொடர்பான காத்திரமான நகர்வுகள் இடம்பெறவேண்டும்’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *