கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டனர். விக்டரி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், கிரிஷ் பால்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தின் மூலம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள ஹெலிகாப்டர் சகோதரர்களையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களது பால்பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் பாக்கி வரவில்லை என போலீஸில் புகார் கொடுத்தனர்.
மேலும் வைக்கோல் மற்றும் தீவனம் கொடுத்தவர்களும் பணம் வர வேண்டியிருப்பதாகப் புகார் அளித்தனர். இதன் மதிப்பு மட்டுமே ரூ.1 கோடி இருக்கும் எனச் சொல்லப் படுகிறது. இந்நிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களது பண்ணையில் இருக்கும் மாடுகளின் நிலை கேள்விக் குறியாக உள்ளது.
இது குறித்து பால் பண்ணை ஊழியர்கள் சிலரிடம் பேசினோம், “ஹெலிகாப்டர் சகோதரர்களின் பால் பண்ணையில் சுமார் 500 வெளிநாட்டு பசு மாடுகள் இருந்தன. இதைப் பராமரிப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தனர். மாடுகள் கறக்கும் பாலைப் பதப்படுத்தி ஹெலிகாப்டரில் அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்வார்கள். எல்லாம் சரியாக நடந்துகொண்டிருந்தது.
ஆனால், சில மாதங்களாகவே எங்களுக்குரிய சம்பளம் முறையாகத் தரவில்லை. அத்துடன் மாடுகளுக்குத் தீவனமும் முறையாக வாங்கிக் கொடுக்கவில்லை. ஒரு பசு மாடு ஒன்று ரூ. 50,000 முதல் 1 லட்சம் வரை மதிப்பு கொண்டது. ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 15 கிலோ தீவனம் தேவைப்படும். மொத்தம் 500 மாடுகள் இருந்தன. தற்போது 350 மாடுகள் மட்டுமே உள்ளன. பணப் பற்றாக்குறையால் குறைந்த அளவு தீவனமே வந்ததால் ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு 5 கிலோ தீவனம் மட்டும் கொடுத்து வந்தோம்.
இதனால் சில மாடுகள் இறந்துவிட்டன. போதிய தீவனமின்றி மாடுகள் நிற்பதைப் பார்த்து மனம் நொந்துபோனது. பெற்ற பிள்ளைகளைப் போல் மாடுகளை கவனித்து வந்ததால், தீவனமின்றித் தவித்து நின்றதைப் பார்க்க முடியாமல் எங்கள் கையில் இருந்து பணம் போட்டு மாடுகளைக் காப்பாற்றினோம்.
எங்களுக்கு சம்பளம் வந்தால்தான் எங்கள் குடும்பம் ஓடும் என்கிற நிலையில எங்களால் மாடுகளைத் தொடர்ந்து பராமரிக்கவும் முடியாது. தற்போது மாடுகள் காப்பாற்றப்பட்டால் போதும் என்கிற நிலையில் நாங்க இருக்கிறோம்” என்று கூறினர்.
இந்நிலையில், “ஹெலிகாப்டர் பிரதர்ஸ்-க்கு சொந்தமாக கொற்கை கிராமத்தில் உள்ள பால் பண்ணை மாடுகள் போதிய தீவனம் இல்லாமல், பசியில் இருப்பதாகவும், மாடுகளை அருகில் உள்ள கோசாலைக்கு மாற்ற தஞ்சாவூர் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு செல்போன் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வருவாய்த் துறையினர், ஹெலிகாப்டர் பிரதர்ஸ்-ன் அனைத்து பால்பண்ணையில் உள்ள மாடுகளின் உடல் நலம், தீவனங்களின் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், ஆடுதுறை அருகே கோவிந்தபுரத்தில் உள்ள கோசாலையில் இந்த மாடுகளைப் பராமரிப்பது தொடர்பாகத் திருவிடைமருதூர் தாசில்தாரும் ஆய்வு செய்து கலெக்டருக்குத் தகவல் அளித்துள்ளார். வாயில்லா ஜீவன்களான மாடுகள் காக்கப்பட வேண்டும் என்பதும் அனைவரது எண்ணமாக உள்ளது.
– விகடன்