கொழும்பு,ஜுன் 25
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தமது கொள்கைகளுக்கு ஏற்ப இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, சர்வதேச நாணய நிதிய குழு இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதிய குழு, நிறைவேற்று பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாகவும், கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும்.
பிரதமர், நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஏனைய பொருளாதார அதிகாரிகள், நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் குறித்தும், தற்போதைய நிலைமை குறித்தும் அந்தக் குழுவினர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர்.
இதன்போது, தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விரிவாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவுவது தொடர்பில் பிரதிநிதிகள் குழுவுக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.