
கல்முனை ஆதார வைத்தியசாலையில் உலக தேசிய விளையாட்டு தின நிகழ்வு

உலக விளையாட்டு தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் (30/07/2021) இன்று பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.
வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு பதில் வைத்திய அத்தியட்சகரும் சுகாதார கல்விப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியுமான Dr.சோ.திருமால், பதில் வைத்திய அத்தியட்சகரும் திட்டமிடல் மற்றும் தொற்று நோய் தடுப்பு பிரிவு வைத்திய பொறுப்பதிகாரியுமான Dr.J. மதன் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.
சுகாதார கல்விப்பிரிவு வைத்திய அதிகாரி Dr.V. அற்புதன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
நிகழ்வு தேசிய கொடியேற்றத்துடன், தேசியகீதம், மரநடுகை, வற்மின்ரன் மைதானம் புனரமைப்பின் பின்னரான திறப்புவிழா , மேசைப்பந்து விளையாட்டு கூடம் ஆரம்பிப்பு என பல நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன.
வைத்திய அத்தியட்சகரின் சிறப்பு உரையில்,
நாம் மனிதாபிமானத்துடன் சேவையாற்றவும், மற்றவர்களுடன் அன்பாக பழகுவும், உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம், சமய கலாச்சார பண்புகள், சுகாதார பழக்கவழக்க நடைமுறைகள் என பல பண்புகள் அவசியமாகின்றது. இதில் உடல் உள வளர்ச்சிக்கு விளையாட்டு மிக முக்கியம். ஆகவே விளையாட்டின் மூலம் நாம் உடல் நலத்தை பேணுவதுடன் சேவைநாடிகளுக்காக சிறந்த சேவைகளையும் ஆற்ற முடியும் என கூறினார்.
Dr.J. மதன் அவர்கள் பேசுகையில்,
ஒவ்வொருவரும் நாம் இயந்திரம் போல் அனைத்து கடமைகளையும் செய்கின்றோம். ஆனால் நமது ஆரோக்கியத்தை கவனிப்பதில்லை. ஆகவே உங்களுக்காக 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். ஒரு சில சிறிய உடற்பயிற்சிகளை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இதனால் சுவாசத் தொகுதி, இதயம், சமிபாட்டுத்தொகுதி, மூளை, நரம்புத் தொகுதி என பல உறுப்புகள் மிக நேர்த்தியாக இயங்கும் இயல்பைத் தரும்.
விளையாட்டின் மூலம் சிறந்த தலைமைத்துவம், தலைமைத்துவத்தின் கீழ் இயங்குதல், விட்டுக் கொடுப்பு , சகிப்புத்தன்மை கூட்டு முயற்சிக்கான மனப்பாங்கு என பல விடயங்கள் ஏற்படுகின்றது. குடும்ப வாழ்க்கையிலும் பல சாதகமான நிகழ்வுகளை எதிர்கொள்ளலாம்.
நாங்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாடினோம், ஆனால் எமது குழந்தைகள் zoom class ல் இருக்கிறார்கள், போனில் கேம் விளையாடுகின்றனர். இது ஆரோக்கியமானதல்ல. என கூறினார்.
வைத்தியசாலையின் பொது சுகாதார பரிசோதகரினால் இலகு உடற்பயிற்சிகள் அனைவருக்கும் பயிற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் V.கிருஷ்ணகுமாரினால் தேசிய கீதம், கொடியேற்ற நிகழ்வுகள் ஒழுங்குகளும், விளையாட்டு மைதானம் ஒழுங்குகள் பிரதம இலிகிதர் தோ.தேவஅருள் அவர்களின் குழுவினராலும், நிகழ்ச்சி ஒழுங்குகள் தாதிய உத்தியோகஸ்தர் S.பானுப்பிரியாவினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மட்டுப்படப்பட்ட உத்தியோகத்தர்களுடன் நடந்த இந் நிகழ்வில் Dr சோ. திருமாலினால் நன்றி உரையும், ஆரோக்கிய உணவாக இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டு நிகழ்ச்சி முடிவுபெற்றது.