கோட்டா சிங்களவர்களுக்கு ஊழல்வாதி; ஆனால் தமிழர்களுக்கு இனப்படுகொலையாளி! பிரான்சில் கவனயீர்ப்பு!

உலகலாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூர் அரசு கைது செய்யக் கோரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் தலைநகர் பரிசில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

கோட்டாபய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது.

இந்தக் கொள்கை மூன்றாம் நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.

இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான கோட்டாபய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என நா.தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் போது சிங்கப்பூர் தூதரக இராஜதந்திரி ஒருவரை சந்தித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர்கள் மகிந்தன் மற்றும் சுதன்ராஜ் கோரிக்கை மனுவினை கையளித்திருந்ததோடு, தமிழர்களின் நிலைப்பாட்டினை வலியுறுத்தியிருந்தனர்.

இக்கவனயீர்ப்பு நிகழ்வில் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தமிழ் சமூக அரசியல் செற்பாட்டாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *