நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு பதிலாக புதிய ஜனாதிபதி வன்முறையை கட்டவிழ்க்கும் பணியை முதல் பணியாக ஆரம்பித்துள்ளார் என்று ஐக்கியமக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியிடம் இந்த நாடானது எதனை எதிர்பார்க்கின்றது என்பதை முதலில் அவர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதேஅவர் இதனை தெரிவித்துள்ளார்.
உண்மையில், தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆணையில் ஜனாதிபதியாகவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளுடனேயே அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபய – ரணில் அரசாங்கத்திலிருந்து வெளியே வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்தது.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களினன் நிலைப்பாட்டிலும் மக்களின் எண்ணப்பாட்டிலும் வேறுபாடு காணப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீளக்கட்டியெழுப்ப போகின்றார் என்பது எம் முன் உள்ளகேள்வியாக உள்ளது.
இதே போன்று நாட்டு மக்கள் தற்போது வாழ்வாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
மக்கள் வரிசையில் நிற்பது அதிகரித்து வருகின்றது.எரிவாயு, எரிபொருள்,பால்மா, அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக வன்முறையை கட்டவிழ்த்துவிடும் பணியை அவர் முதல் பணியாக ஆரம்பித்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடல் இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
காலிமுகத்திடலில் சுதந்திரமான முறையிலும் அமைதியான முறையிலுமே இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பல்வேறு அடிப்படை காரணங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான அடிப்படை காரணங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத் தரப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்றும் கூறினார்.
பிறசெய்திகள்