யாழில் நாயை அடித்துக்கொன்ற சம்பவம் – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு 09ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.

தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *