முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள்: கோலி அதிரடி

2021-ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பந்து வீச்சே (3.5 ஓவர்கள் பந்து வீசி 43 ரன்கள் வழங்கினார்) காரணம் என்று கூறி அவரை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்ததுடன், கடுமையான வார்த்தைகளால் இழிவுப்படுத்தினர்.

மதரீதியாக அவரை விமர்சித்ததுடன் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கருத்துகளை பதிவிட்டனர். இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலியிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,

ஒருவரை அவரின் மதம் சார்ந்து தாக்கி பேசுவது தான் மனிதர்கள் செய்யும் மிக மோசமான காரியமாக இருக்க முடியும். சமூக வலைதளத்தில் பேசும் முதுகெலும்பற்ற இத்தகைய நபர்களை கண்டுகொள்ள தேவையில்லை. இவர்கள் நேரில் பேச தைரியம் இல்லாதவர்கள்.

மதம் என்பது புனிதமானது மற்றும் தனிநபர் சார்ந்தது. அதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது. முகமது ஷமி இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். முன்னணி பவுலராக இருக்கிறார்.

அதை எல்லாம் பார்க்காமல் கொச்சைப்படுத்தி பேசுபவர்களுக்காக எனது வாழ்நாளில் ஒரு நிமிடத்தை கூட நான் செலவிட விரும்பவில்லை.

இந்திய வீரர்கள் அனைவரும் ஷமிக்கு துணை நிற்கிறோம். எங்களின் சகோதரத்துவம், நட்புறவை அசைத்து கூட பார்க்க முடியாது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *