சீரற்ற வானிலையால் 22 பேர் உயிரிழப்பு; 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு , 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 17 மாவட்டங்களிலும் 126 பிரதேச செயலகப் பிரிவுகள் காலநிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் வரை 22 பேர் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கேகாலை கலிகமுவ ரஸ்னகொட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் 70 வயதுடைய தந்தையும் 32 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு தாய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குருநாகல் அலவ்வ பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கு வெனன்தருவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குருநாகல், ரிதீகம பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு, வெள்ளம் என்பவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட 384 குடும்பங்களைச் சேர்ந்த 1498 பேர் 23 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அனர்த்தம் ஏற்படக் கூடும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளிருந்து முன்னெச்சரிக்கையாக 1020 குடும்பங்களைச் சேர்ந்த 3537 பேர் இடமாற்றப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 17 ஆயிரத்து 481 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 18 வீடுகள் முழுமையாகவும் , 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாரம்மல், பொல்கஹவெல, அலவ்வ, பன்னல, பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு மேலும் உயர்வடைந்துள்ளதோடு, பல்வேறு நீர்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளிலிருந்து வெளியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக அதிகாரத்தை பயன்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், முப்படைகள் மற்றும் பொலிஸார் எத்தகைய இயற்கை அனர்த்தங்களை எதிர் கொள்வதற்கும் தயாராக உள்ளதாகவும் அதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் காரியாலயங்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்

மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலைமாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *