தமிழக மீனவர்கள் 23 பேரும் பயணித்த மீன்பிடிப் படகின் நீளத்தை நீதிமன்றிற்கு சமர்ப்பிற்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இரண்டு படகுகளையும், 23 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், காரைநகர் கடற்படை முகாமில் தங்கவைத்ததோடு அவர்களின் விபரங்களை யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த பருத்தித்துறை நீதிவான் 23 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, அந்த வழக்கு நேற்று வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிவான் தமிழக மீனவர்கள் 23 பேரையும் இன்று மன்றில் ஆயர்படுத்த உத்தரவிட்டார்.
இதற்கமைய, 23 மீனவர்களும் இன்று மன்றில் ஆயர்படுத்தப்பட்டபோது வழக்கை ஆராய்ந்த நீதிவான் திணைக்களம் முன்வைத்த 3 குற்றச்சாட்டுகளில் 2018ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடிச் சட்டத்தின் கீழ் குற்றப்பணங்கள் படகின் நீளத்திற்கு வரையறை செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதும், இந்த மீனவர்கள் பயணித்த இரு படகின் நீளங்கள் குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே, அவற்றை உறுதி செய்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டு வழக்கு 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.