புத்தளத்தில் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிகமான சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் முடிவடைந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,” சமையல் எரிவாயு இல்லை” என்ற பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், சமையல் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக முடிந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வரும் மக்கள் ஏமாற்றத்துடனேயே வீடுகளுக்கு திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன், ஒரு சில மக்கள் சமையல் எரிவாயு விற்பனையாளர்களோடு முரண்பட்டுக்கொண்டு செல்வதையும் அவதானிக்க முடிந்தது.
முழுகையாக நிரப்பப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனையாளர்கள் பதுக்கி வைத்துக்கொண்டு, தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் திருட்டுத்தனமாக வழங்குவதாக ஒதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும், வாரத்தில் ஒருமுறையே சமையல் எரிவாயு தமக்கு விநியோகிக்கப்படுவதாகவும் இதனாலேயே சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், 2.3 கிலோ கிராம், 5.0 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு வழங்கப்படுவதில்லை எனவும் மட்டுப்படுத்தப்பட்ட 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு மாத்திரமே வழங்குவதாகவும் சமையல் எரிவாயு விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முழுமையாக நிரப்பப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வரும் லொறி எமது விற்பனை நிலையங்களை வந்தடைந்தவுடன் மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு செல்கின்றனர்.
இதனால், எமது விற்பனை நிலையத்திற்கு கிடைக்கும் சமையல் எரிவாயுக்கள் ஒரே நாளிலேயே முடிவடைந்து விடுவதாகவும் சமையல் எரிவாயு விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.