படுகொலைக்குள்ளான அரசாங்கத்திடமே தீர்வை பெற்றுத்தர கேட்கின்றோம்! முன்னாள் போராளி அரவிந்தன்

இந்த அரசாங்கத்தால் தான் இனப்படுகொலைக்கு உள்ளானோம் ஆகவே இந்த அரசாங்கத்திடமே எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு தீர்வைத் தர வேண்டும் என்று கேட்கின்றோம் என முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து முன்னாள் போராளிகள் அனைவர் சார்பாகவும் மாவட்ட ரீதியாக ஒவ்வொருவராக நாங்கள் தென் இலங்கையிலே உள்ள அரசியல் தலைவர்கள், மற்றும் முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான ஒரு பயணத்தை நேற்று (11) மேற்கொண்டிருந்தோம்.

அந்த சந்தர்ப்பத்திலே, போராளிகளுடைய அன்றாட, தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள், அடக்குமுறைகள், விசாரணைகள், தொடர்ந்து வரும் வழக்குகள், அரசியல் கைதிகளுடைய பிரச்சினை, காணாமல் போனவர்களுடைய பிரச்சினை, காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தினுடைய ஆக்கிரமிப்பு, மற்றும் பெண் போராளிகளுடைய, அதிமுக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக பேசி இருந்தோம்.

மிக முக்கியமாக எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி, அனுஷ்டிக்கப்பட இருக்கின்ற மாவீரர் தினம் தொடர்பாக பேசி இருந்தோம். காரணம் எங்களுக்கு மாவீரர் தினம் தொடர்பிலே, விதிக்கப்படுகின்ற தடைகள், நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக அவர்களுக்கு சுட்டிக்காட்டிய விடயம்,

இலங்கையிலே இரண்டு தரப்புகள் யுத்தத்திலே ஈடுபட்டிருந்த நிலையிலே ஒரு தரப்பை அவர்கள் ஒதுக்கி விட்டிருக்க கூடியதாக தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன.

இங்கே இறந்தவர்களை நினைவு கூருவது, விடுதலைப் புலிகள் என்பது அறவே இல்லாத நிலையிலே, விடுதலைப் புலிகளில் இருந்த தங்களுடைய குடும்ப உறவுகளை நினைவு கூருகின்ற ஒரு நிகழ்வே நடைபெற்று வருகின்றது.

ஆகவே அவர்களை புதைத்த இடத்திலே நாங்கள் வழிபாடுகளை செய்வதற்கு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடல்களை நாங்கள் செய்திருந்தோம்.

வடக்கு கிழக்கிலே, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற ஒரு நிலை காணப்படுகிறது.

பகுதி எங்குமே இராணுவ காவலரண்கள் அல்லது தடை முகாம்கள் காணப்படுகின்ற நிலைமை இருக்கின்றது. பொலிசாருடைய அல்லது சிவில் சமூகத்தினுடைய வாழ்க்கையை இராணுவம் கொண்டு நடத்துகின்ற ஒரு நிலைமை இங்கே காணப்படுகின்றது.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா, JBPயினுடைய சார்பிலே அவர்களுடைய தலைமை செயலகத்திலே நலிந்த ஜெயதீஷ்ச மற்றும் கமலநல அமைச்சராக இருக்கும் கூடிய மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வீடு உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குரிய ஜீவன் தொண்டமான், ஆகியோரை நாங்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். எங்களுக்கான நேரங்களை எடுத்துக் கொள்ள முடியாத, ஒரு நிலைமை காணப்பட்டது.

ஒவ்வொரு நாளும், நாங்கள் நினைவஞ்சலிகளை செய்வது அல்லது கடையடைப்பு என்று கூறினால் எங்களுக்கு 365 நாளும் போதாத ஒரு நிலைமை காணப்படும்.

ஒரு நாளை நாங்கள் மாவீரர் தினத்திலே போரிலே ஈடுபட்டு இறந்த போராளிகளை நினைவு கூருவதற்கும், முள்ளிவாய்க்கால் 18 னை ஒட்டுமொத்த பொதுமக்களுக்குமான நினைவேந்தலுக்கான நிகழ்வாக, நாங்கள் அனுசரிக்கிறோம். அதை அனுமதிக்க வேண்டும்.

நாங்கள் சந்தித்து கதைத்த போது முன்னாள் போராளிகளுக்கு அவர்கள் முன்னுரிமை அடிப்படையிலே உதவிகளை வழங்குவதற்கு விரும்புவதாக, தெரிவித்திருந்தனர்.

இங்கே சில விடயங்களிலே ஜனாதிபதி கூறுவது போன்று மரண சான்றிதழ் பத்திரங்களை வழங்குவது என்பது, ஒருவருக்கு இருக்கக்கூடிய நோயை அறியாது அவருக்கு மருந்தை வைத்தியர் கொடுப்பதற்கு சமமானது.

தமிழ் மக்களுக்கான தீர்வை, இந்த அரசாங்கத்தால் தான் இனப்படுகொலைக்கு உள்ளானோம்.

இந்த அரசாங்கத்திடமே நாங்கள் கேட்கின்றோம். எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு ஒரு தீர்வைத் தர கேட்கின்றோம்.

தமிழ் மக்கள் தேசிய இனமாக சுய நிர்ணய உரிமையோடு சமத்துவமாக சிங்கள மக்களோடு வாழ்வதற்காக நாங்கள் மிகுந்த பிரஆசையோடு விரும்புகின்றோம்.

இனி ஒரு போரையோ அல்லது எதிர்கால சந்ததி ஒரு போருக்குள் செல்வதை நாங்கள் மறுதலிக்கின்றோம் அல்லது நாங்கள் அதை விரும்பவில்லை. அதனால்தான் நாங்கள் தென் இலங்கைக்கு சென்று இது சம்பந்தமாக பேச விரும்புகின்றோம்.

இதனைவிட முன்னாள் போராளிகளுக்கு வீடுகள் இல்லை, காணிகள் வழங்கப்படவில்லை, மின்சாரம் இல்லை, மிக இக்கட்டான நிலைமையிலே வாழ்கின்றோம், 12 வருடமாக அரசு கூறிய எந்த விடயங்களையுமே, இங்கு முன்னெடுக்கவில்லை அல்லது ஒரு லட்சம் ரூபாய் நிதியிலே கடன் வழங்குகின்ற நிலை கூட இல்லை.

அந்த நிலையிலே, எங்களுக்கு நேற்றைய தினம், விசேடமாக ஜனாதிபதியினுடைய செயலணியால் நியமிக்கப்பட்ட மனித உரிமை ஆணைக்குழு, நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையிலே சாட்சியம் அளிக்கக்கூடிய ஒரு ஏற்பாட்டை செய்திருந்தார்கள்.

அந்த இடத்திலே சாட்சியம் அளித்திருந்தோம். போரிலே என்ன நடந்தது? என்பதை மிக அறுதியாக, கூறியிருந்தோம். போராளிகள் தற்போது என்ன நிலைமையிலே இருக்கிறார்கள்? எங்களுக்கு இங்கே இவ்வளவு அடக்கு முறைகள், நாங்கள் இந்த நிலைமையிலே, விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்றோம்.

அரசியல் கைதிகள் இத்தனை வருடமாக சிறைகளிலே வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடுதலையாவதற்கு எந்த வழிவகையும் இல்லாமல் இருக்கின்றது என்பதை நாங்கள் கண்ணீர் மல்க நாங்கள் தெரிவித்திருந்தோம்.

ஜனாதிபதி கேட்டிருக்கிறார், புலம்பெயர் தமிழர்களை இங்கே முதலீடுகளை செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களை தடை செய்து வைத்துக்கொண்டு ஜனாதிபதி அழைப்பது என்பது மிக ஏற்புடைய ஒரு காரணமாக எங்களுக்கு தெரியவில்லை.

விடுதலை புலிகளினுடைய தடையை நீக்க வேண்டும். ஏனென்று கேட்டால் விடுதலைப் புலிகளை தடை நீக்கி, JVP போல் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்திலே ஒரு அரசியலிலே பங்கு கொண்டு சிங்கள மக்களோடு, இணக்கமாக வாழக்கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
போராளிகளை பின் தொடர்ந்து அவர்களை அடக்குமுறைக்குள் வைத்துக் கொள்ளாமல் திருப்பியும் அவர்களை பயங்கரவாதிகளாகவே சித்தரிக்காமல், நாங்கள் இப்போது சமூகத்துக்குள், சமூகமயப்படுத்தி இருக்கிறோம்.

நாங்கள் இப்போது பொதுமக்களாகவே இருக்கிறோம். ஆகவே எங்களுக்கான நிவாரண திட்டங்களை செய்து தர வேண்டியது இந்த அரசினுடைய கடமையே என்பதனை அந்த ஆணைக் குழுவிலே பதிவு செய்திருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *