திருகோணமலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்த நிலையில், டெங்கு பரவும் அபாயமும் காணப்படுகின்றமையினால் மக்கள் அவதானமாக சுகாதார நடை முறைகளை பேணி செயற்பட வேணும் என திருகோணமலை பிரதி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமணையில் இன்று (12)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வாரத்தில் 70 தொடக்கம் 90 வரையான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
நேற்று (11) மட்டும் 70 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில் கந்தளாய்,பதவிசிறிபுர, கோமரங்கடவெல ,சேருவில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்தவர்களே இதில் அடங்குவர். இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்
குச்சவெளி பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்தில், தற்போது வரை 23 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
மரணங்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது எனினும் தடுப்பு மருந்து ஏற்றும் பணி திருப்திகரமான முறையில் பாடசாலை மாணவர்களுள் உட்பட வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார துறை ஊழியர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது .
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் மாணவர்கள் சுகாதார நடை முறைகளை பின்பற்றி நடக்க வேண்டும், தேவையற்ற ஒன்று கூடல்களை தவிர்த்து அரசாங்கத்தின் சுற்றரிக்கையின் பிரகாரம் சுகாதார வழி முறைகளை கடைப் பிடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
திருகோணமலை நகரில் மாணவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .
இது தவிர டெங்கு நோயாளர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள்.
நவம்பர் மாதத்தில் மாத்திரம் 12 டெங்கு நோயாளர்கள், மூதூர்,கிண்ணியா, கந்தளாய், போன்ற சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் இனங் காணப்பட்டுள்ளனர்.
எனவே பொது மக்கள் வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்காமலும் சூழலை பாதுகாத்துக் கொள்ளவும் மழை காலமாகையால் இது விடயத்தில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் மேலும் தெரிவித்தார்.