2022 ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு முன்மொழிவுகளை வாசிக்கும் போது அரசாங்க வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு பாரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா தெரிவித்தார்.
மேலும், அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக உயர்த்தியுள்ளமையே இதற்கு காரணம்.
இதனால் எதிர்காலத்தில் அரச வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் குறைந்தளவே கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. இதனால் திறன் கொண்ட இளையோர் வெளிநாடுகள் நோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புக்களே உருவாகும்.
ஏற்கனவே, இந்நாட்டில் லட்சக்கணக்கான இளையோர் தொழில் வாய்ப்புக்கள் இல்லாது வெட்டியாய் அலைகின்றனர். மற்றுமொரு தொகுதி இளையோர் வெளிநாடுகளை நோக்கி நகர்ந்துள்ளனர்.
இதனால் நாட்டின் தேசிய வருமானத்திற்கு வினைத்திறனுடன் பங்களிப்பாற்றும் மனித வளங்கள் வீண் விரையமாகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆட்சியாளர் தங்களது மொத்தச் செலவீனத்தை குறைப்பதற்காக எதிர்காலத்தில் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இளையோரை உரிய காலப்பகுதியில் அரச தொழில் வாய்ப்புக்களுக்கு உள்வாங்காது ஓய்வு நிலை வயதை உயர்த்துதல் தொழில் வாய்ப்பை தேடும் இறைஞர் யுவதிகளுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.