புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று விஜயம் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
இதனால், மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆராச்சிக்கட்டுவ, ஆனவிழுந்தாவ, பிங்கட்டிய, உடப்பு, முந்தல், தாராவில்லு ஆகிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் நாமல் பார்வையிட்டார்.
அத்துடன், வெள்ளத்தினால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகள் என்பனவற்றையும் பார்வையிட்ட அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து அவர்களின் நலன்கள், தேவைகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.
மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவசரமாக செய்துகொடுக்குமாறும், தேவைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் நாமல் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், வாழ்வாதரத்தை இழந்துள்ள முந்தல் பிரதேச இறால் பண்ணை உற்பத்தியாளர்களையும், கற்பிட்டி பகுதியில் உள்ள விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது, இறால் வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறினார்.
இதேவேளை, முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலும் அமைச்சர் நாமல், இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அநுருத்த, சனத் நிசாந்த பெரேரா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த 14 வீடுகளை மீளவும் புனரமைப்பதற்கு, பயனாளிகளுக்கு அமைச்சரால் நிதியுதவிகளும் இதன்போது வழங்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.


கிளிநொச்சியில் வீதி விபத்தில் மாணவி இறந்தமையைக் கண்டித்து போராட்டம்!