வரவு – செலவு திட்டத்தின் போது அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்காமல் விட்டது அரச ஊழியர்களை வறுமையில் கையேந்த வைக்கின்ற செயற்பாடாகும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
வரவு- செலவு திட்டம் தொடர்பாக இரா.துரைரெத்தினம், ஊடக அறிக்கை ஒன்றை இன்று (15) வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
இலங்கையில் அரச நிருவாகத்தின் கீழ் கடமையாற்றுகின்ற அனைத்து அரசஊழியர்கள் அனைவரும் 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் போது சம்பளம் அதிகரிக்கப்படும் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்த்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில் அவர்கள் எதிர்பார்பை புறந்தள்ளி, அரச சேவையாளர்கள் அனைவரையும் ஏமாற்றிய முறையில் இவ் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
தற்போது நாடு எதிர் நோக்கின்ற சூழ்நிலையில் பொருட்கள் சேவைகளது விலை அதிகரிப்புக் காரணமாக அன்றாட வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத வகையில் அரச உத்தியோகத்தர் கடும் கஷ்ட நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
அரசில் கடமை புரிவோர் கடன் சுமையுடனும், பொருளாதார சிக்கலுக்கு மத்தியிலும் எவ்வித அரச சலுகைகளும் இல்லாமல் அரச சம்பளத்தையே மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவற்றை எல்லாம் = தவிடு பொடியாககும் வகையில் இந்த அரசு வரவு செலவுத் திட்டத்தை அமைத்துள்ளது.
மேலும், அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப் படவில்லை என்ற செய்தியை கேட்டு பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் மனம் உடைந்து மிகவும் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு மத்தியில் செய்வதறியாது வேதனையுடன் உள்ளனர்.
அரசாங்கத்தின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல.
எனவே வரவு செலவுத்திட்டத்தை மீள் பரிசீலனை செய்து, இந்த ஆண்டிலேயே குறைநிரப்பு வரவு செலவுத்திட்டத்தின் போது விசேட அனுமதியுடன் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.
இதற்கு அமைச்சரவையும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.