மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானது! முடிவைப் பரிசீலனை செய்யுமாறு ஐங்கரநேசன் கோரிக்கை

மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் போரில் ஈடுபட்டு இறந்தவர்களின் நினைவாகவும், போரால் இறந்த பொதுமக்களின் நினைவாகவும் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையைப் பொது நினைவுநாளாகக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இறந்தோரை நினைவுகூரும் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் வந்தாலும் அதற்குப் பல தடைகள் இருந்து வருகின்றமையே இதற்கான காரணம்.

தமிழ்மக்கள் போராடி மடிந்த வீரமறவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளையும், போரால் இறந்த பொதுமக்களின் நினைவாக மே 18 இல் முள்ளிவாய்க்கால் தினத்தையும் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்து வரும் நிலையில், ஆயர் மன்றத்திடமிருந்து இக்கோரிக்கை எழுந்துள்ளது.

கூட்டுப் பிரார்த்தனைகளைப்போன்று கூட்டு அஞ்சலிகளுக்கும் வலிமை மிக அதிகம். இதனாலேயே வௌ;வேறு காலப்பகுதிகளில் இறந்தாலும் போராடி மடிந்தவர்களுக்கான கூட்டு நினைவுநாளாக நவம்பர் 27 ஆம் திகதி போரில் மடிந்த பொது மக்களுக்கான கூட்டு நினைவுநாளாக மே 18 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கூட்டு நினைவுநாளுக்கான இத்திகதிகள் எழுந்தமானமான தெரிவுகள் அல்ல. ஒவ்வொரு திகதியும் தன்னகத்தே தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான வரலாறுகளைப் பொதிந்து வைத்திருக்கிறது. இத்தினங்கள் தமிழ்த்தேசிய இனத்தின் வலிமிகுந்த போராட்ட வரலாற்றைச் சந்ததிகள் தோறும் கடத்தும் வரலாற்றுக் கடத்திகளாகும்.

இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும்.

இதேபோன்றே, மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும்.

அந்தவகையில், மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைச் சர்வதேசங்களுக்கு எடுத்துச்சென்ற வெள்ளாடைப் போராளிகளாகக் கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் குருவானவர்கள் பலர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் சார்ந்த அமைப்பிடமிருந்து கெடுபிடிகளைக் காரணங்காட்டி இக்கோரிக்கை எழுந்திருப்பது தமிழ் மக்களிடையே பெருங் கவலையைத் தோற்றுவித்துள்ளது.

எனவே, ஆயர் மன்றம் தங்களது இந்த முடிவை மீள்பரிசீலனை செய்து, தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியினர் இறந்த தங்கள் தலைவர்களின் நினைவுகளைக் கார்த்திகை வீரர்கள் தினமாக வெளிப்படையாகவே கடைப்பிடிப்பதைப்போன்று, தமிழ்மக்களும் போரில் இறந்த போராளிகளினதும் பொதுமக்களினதும் நினைவுநாட்களைக் கடைப்பிடிக்கும் உரித்துடையவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்குத் தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இனப்பலமே தேசத்தையும், மக்களையும் பாதுகாத்து ஆட்சியுரிமையை வழங்கும் அத்திவாரம்! மாவை தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *