அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் எத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில், போராட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் எத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூட்டாக அறிவித்துள்ளனர்.
நாங்கள் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதனை தடுக்க காவல்துறையை பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். அவர்கள் எங்கள் அமைப்பாளர்களை அச்சறுத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டத்தை மீறினால் பிரச்சினை என எச்சரிக்கின்றார்கள். போராட்டத்திற்கு அஞ்சிய அரசாங்கம் போராட்டத்தில் பங்கேற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இன்று அடக்குமுறையை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. நீதிமன்றத்தை நாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இவை அனைத்திற்கும் எதிராக நாம் போராட்டத்தை நாம் முன்னெடுப்போம். நாளை இது நிச்சயம் இடம்பெறும். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு நாம் அஞ்சவில்லை. நாங்கள் இதனை கட்டாயம் செயற்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தினமும் 200 பேர் உயிரிழக்கும் போது நாட்டை திறந்து வைத்திருந்தவர்கள் இன்று எமக்கு புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இது அவமானம், வெட்கம், இவ்வாறு ஆடையை அவிழ்த்துவிட்டு அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட வேண்டாமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
எதற்கும் அஞ்சாத ஜனாதிபதி இந்த ஜனநாயக செயற்பாட்டிற்கு தடை விதிக்கமாட்டார் என நினைக்கின்றேன். இல்லாவிடின் இன்று இந்த நாட்டில் இருக்கும் முதலாளிக்கு பைத்தியம் என்று அர்த்தம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தமிழர் நினைவுநாளை மாற்ற கிறிஸ்தவ ஆயர்களுக்கு என்ன தேவை! அகில இலங்கை இந்து சம்மேளனம் கண்டனம்