மக்கள் சேவைக்காக வரும் எம்.பிகளுக்கு ஓய்வூதியம் எதற்கு? சாணக்கியன் சபையில் கேள்வி

மக்கள் சேவைக்காக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (15) இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

ஆளும் தரப்பினரும் எதிர் தரப்பினரும் கொள்ளையடித்தவர்கள் தொடர்பாக பேசுகிறார்கள்.

நாமும் இந்தக் கொள்ளையர்கள் எப்போது பிடிப்பட்டு சிறைக்குச் செல்வார்கள் என்பதை காண ஆவலாக இருக்கிறோம்.

மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்கள் இருந்தால், அவர்களை சிறையில் அடையுங்கள். நாமும் அதனைக் காண மகிழ்ச்சியாக காத்துக் கொண்டிருக்கிறோம்.

நிதியமைச்சரின் 2022 வரவு – செலவுத் திட்ட உரையானது, திருமண வீட்டில் கதைக்க வேண்டிய கதையை மரண வீட்டில் கதைத்ததைப் போன்றுதான் காணப்பட்டது.

இந்த வரவு – செலவுத் திட்டமானது, இலங்கையின் பொருளாதாரம் குறித்து அக்கறையில்லாமல் தயாரித்தது போன்றுதான் காணப்படுகிறது.

உதாரணமாக ஒரு கிராம அபிவிருத்திக்காக 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து கொண்டுவரப்பட்டதாகவே தெரிகிறது.

செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் அவசியமா என்பதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். அத்தோடு, வேலை செய்ய முடியாத இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் பதவிலிருந்து விலக்க வேண்டும்.

அவருக்கு வாகனம் கொடுத்து, டீசல் கொடுத்து, சாரதி, அலுவலம், சம்பளம் என எல்லாம் கொடுத்து அவரால் வேலை செய்ய முடியாவிட்டால் அவர் அந்தப் பதவியில் இருப்பதில் பயனில்லை.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாலேயே நன்றாக வேலையை செய்ய முடியும். எனவே, அரசாங்கம் இதுதொடர்பாகவும் சிந்தித்து, ஒரு கொள்கை முடிவொன்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், என்னைப் பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எனும் ஒன்றே தேவையில்லை. மக்கள் சேவைக்காக வரும் உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்?

ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தற்போது எழுந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டு குறித்த விடயம் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளனர் என நான்
அறியக்கிடைத்தேன்.

மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துக்களைக் கூறாமல், பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமெனில் சில தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தே
ஆக வேண்டும்.

நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, எரிபொருள் விலை குறித்து சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தினார்.

இது அப்போது கடுமையாக கேலிக்குள்ளாக்கப்பட்டது. ஆனால், இதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் உண்மையில் எரிபொருள் கொள்வனவிற்கு அரசாங்கத்தினால் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

சம்பளத்தை வழங்கக்கூட பணத்தை அச்சடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசாங்கம் கூறியுள்ள சில விடயங்களை நடைமுறைப்படுத்த எங்கிருந்து பணம் கிடைக்கப்போகிறது என்று இதுவரை
தெரியவில்லை.

அன்று எம்.சி.சி.க்கு எதிர்ப்புத் தெரிவித்த தேச அபிமானிகளில் ஒருவர் கூட கொழும்பு, துறைமுக நகரத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரிவினைவாதக் கட்சியாக சித்தரித்து தான் இதுவரை காலமும் நீங்கள் வாக்குக் கேட்டீர்கள். ஆனால், இனியும் இவற்றை மக்கள் நம்பத் தயாரில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *