புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல் – மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த புதிய சுகாதார வழிகாட்டல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

அதன்படி,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முன் அனுமதி பெறப்படாவிட்டால், மறு அறிவிப்பு வரும் வரை பொதுக் கூட்டங்கள், கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடத்த தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும் திருமண நிகழ்வுகளின்போது, திருமண மண்டப கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியளவிலும் 100க்கு மேற்படாத வகையிலும் நபர்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் திருமண வைபவங்களில் மதுபான விருந்துபசாரங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மரண வீடுகளில் ஒரு சந்தர்ப்பத்தில் ஆகக்கூடியது 20 பேருக்கு மாத்திரமே பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புக்களுக்கான தனியார் வகுப்புகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானவர்களின் பங்கு பற்றலுடன் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகளுக்கு ஐம்பது சதவீதமானோரை அனுமதிக்க முடியும் எனவும்  பணியிடங்கள் வழக்கம் போல் செயற்படும் அதே வேளையில், பாலர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் கண்காட்சி மற்றும் மாநாடு என்பவற்றை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதார வழிக்காட்டல்களை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *