மன்னார் மாவட்டத்தின் கொரோனா நிலமை தொடர்பாகவும்,டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும், அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு, மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமை தாங்கியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில்,
மன்னார் மாவட்டத்தில் எவ்வித டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும், ஆனால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
மேலும் கொரோனா தொற்று தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்ட தோடு,விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போக்குவரத்து துறையினருக்கு.அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளின் போது பயணிகள் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்கும் வகையில் தமது சேவையினை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கான விசேட பஸ் சேவையினையும்,வெள்ளாங்குளத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பஸ் சேவையையும் உடனடியாக ஆரம்பிக்க உரிய தரப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
மன்னாரில் அதிகரித்த தொற்றாளர்களினால் மீண்டும் சகல நடைமுறைகளையும் மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
குறித்த விசேட கலந்துரையாடலில் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவு அதிகாரி, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

