இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் சகல தமிழ் பேசும் கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்வந்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபோது முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றை கூறியிருந்தார்.
அரசியல் தீர்வொன்றை காண்பது தொடர்பில் ஒற்றுமை வர்தன் ஷ்ரிங்லா சம்பந்தன் பேணி ஒரே அணியாக செயல் தலைமையிலான அணியினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்திய வெளியுறவு செயலாளரின் இந்த அறிவுரை இரு விடயங்களை அறியத்தந்திருந்தது. முதலாவதாக தமிழ் தரப்பினர் இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரச்னை தொடர்பாக ஒற்றுமைப்பட்டிருக்கவில்லை என்பதாகும்.
இரண்டாவதாக இலங்கையில் அரசியல் தீர்வொன்றை, தமிழ் தரப்பினர் வலியுறுத்திய போதிலும், அவர்களிடம் ஒற்றுமையான போக்கு காணப்படவில்லை என்பதை வடக்கு- கிழக்கு பிரச்னையில் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்ற இந்தியா உட்பட சர்வதேச சமூகம் நன்கறிந்து வைத்துள்ளது என்பதாகும்.
சுமார் நான்கு தசாப்த கால அரசியல் வாழ்வில் பலதரப்பட்ட அனுபவங்களையும் பெற்ற ஓர் அரசியல்வாதியாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்பாள் எதிர்கட்சிதலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் விளங்குகின்றார்.
2015 ஆண்டில் நல்லாட்சி என்றழைக்கப்பட்ட அரசாங்கத்தை அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்படுத்துவதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தலைமை தாங்கியதோடு எதிர்க்கட்சி தலைவராகவும் தாம் பதவி வகிக்கும் விதத்தில் அரசியல் நகர்வுகளை இரா. சம்பந்தன் மேற்கொண்டிருந்தார்.
அன்று ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனகூட வடக்கு – கிழக்கு மக்கள் இருந்திராவிட்டால் 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருக்கும் பட்சத்தில் கொன்று புதைக்கப்பட்டிருப்பேன் என்றுகூடத் தெரிவித்திருந்தார்.
இதுதவிர, அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை ஒக்ரோபரில் பதவியிலிருந்து நீக்கி, ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்டுவர அன்றைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுத்த முயற்சியை முறியடிப்பதிலும் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி எடுத்த அரசியல் நகர்வுகளே குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.
இவ்வாறு ஒரு பலம்மிக்க நிலையில் உள்நாட்டில் மட்டுமல்ல. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்னைக்கு ஓர் ஆக்கபூர்வமான தீர்வை எட்டியிருக்க முடியும்.
அத்துடன், இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் அனுசரணையோடு தமிழ் பேசும் கட்சிகளைக்கூட ஓரணியில் கொண்டுவந்திருக்க முடியும்.
ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுள் நிலவிய ஒற்றுமையின்மையை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கூட்டமைப்பிலிருந்தும் வெளியேறியமை எடுத்துக்காட்டியிருந்தது.
அதற்கு முன்பதாக வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தது.
வெளிப்பார்வைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையான ஓர் அமைப்பாக இருப்பதுபோல காணப்பட்டாலும் உள்ளே கூட்டமைப்பினுள் தற்போது அங்கம் பெறுகின்ற கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றமையையே அறிய முடிகின்றது.
இருந்தபோதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமது நீண்ட கால அரிசியல் முதிர்ச்சியின் அடிப்படையில் தற்போது சகல தமிழ் பேசும் கட்சிகளையும் ஒண்றிணைத்து தமிழ் பேசும் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் புதிய முயற்சியில் ஆர்வம் காட்டியுள்ளார்.
இது வரவேற்கப்படக்கூடிய ஒரு நகர்வாக இருப்பதோடு வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்க்க ஒரே அணியில் நின்று குரல் கொடுத்து தீர்வொன்றை காணும் பட்சத்தில், அந்தத் தீர்வு மலையக தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்னைகளுக்கும் ஆக்கபூர்வமான தீர்வைக்காண வழியமைப்பதாக இருக்குமென்றே கருதலாம்.
எனவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி காலம் கடந்த ஒரு நடவடிக்கையாக இருக்கின்ற போதிலும் காலமறிந்ததாகவே காணப்படுகின்றது.