தாயகத்தில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பிறகு எதிராக ஒன்றிணைய தமிழரசுக் கட்சி முடிவு

தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் அதிகளவான இராணுவத்தினரை குவித்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளைராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்றுவதற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த மாதம் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் இன்றும் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்டக் குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் ஆர்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அரச தலைவருக்கு அனுப்பும் வகையில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாகச் சாடிய மாவை சேனாதிராஜா எமது ஆட்சியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் எமது பிரதேசத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எமது அடையாளம், உரிமை என்பன நிலைநிறுத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *