இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில், இன்று (16) உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையிடம் அந்நியச் செலாவணி 2 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது. இதில் 300 மில்லியன் டொலர் தங்கமாக இருக்கிறது.
1.7 பில்லியன் டொலர்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே இதனைக் கொண்டு நாட்டை நிர்வகிக்க முடியாது.
அடுத்த சில வருடங்களில் 6 பில்லியன் டொலர்களைக் கடனாக செலுத்த வேண்டியுள்ளது.
இன்று டொலர் கையிருப்பு இல்லை. தற்போது உரப் பற்றாக்குறை இருக்கிறது.
இதனால் வரும் மார்ச் மாதமளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.
உணவுத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விநியோகத்தில் தடை ஏற்படும்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இதற்கு அரசாங்கத்திற்கு சரியான திட்டம் வேண்டும்.
இல்லையெனில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். என்று மேலும் தெரிவித்தார்.