நீரிழிவு தொற்று அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையப்பொறுப்பு வைத்திய அதிகாரி ம.அரவிந்தன் தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாமினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இளவயதினருக்கு இந்த நீரிழிவு நோயானது அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த நோயால் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. குறிப்பாக இந்த நீரிழிவு நோய் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள் உள்ளன. குறிப்பாக பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லது தகுந்த வேளைகளில் நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோயினை இனங்காணும் பட்சத்தில் அந்த நோயை குணமாக்க முடியும் என்றும் தெரிவித்தாா்.

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும் நீரிழிவு சிகிச்சை முகாமை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் ம.அரவிந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்ததோடு யாழ் நீரிழிவு கழகத்தின் தலைவர் தி. மைக்கல், செயலாளர் க. கணபதி மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறித்த நீரிழிவு சிகிச்சை முகாமில் பொதுமக்கள் நீரிழிவுப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *