13 இலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்! சித்தார்த்தன் வலியுறுத்து

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற கரிசனை இருந்தால், அதில் அர்ப்பணிப்பிருந்தால் முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை நிறைவேற்றுங்கள். 13 இலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியும் புளொட் தலைவருமான த.சித்தார்த்தன் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், அரசியல் யாப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை இன்று வரையில் நீங்கள் முழுமையாக அமுல்படுத்தவில்லை. அரசியல் யாப்பை மீறுவதில் நீயா? – நானா? என்று போட்டிபோடுகின்றீர்கள்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த மறுப்பதானது அரசியல் யாப்பை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும். இதனை உணர முடியாதளவிற்கு எதேச்சதிகாரம் உங்களின் கண்களை மறைத்திருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, 13 பிளஸ் தொடர்பில் பேசினார். இந்தியாவிற்கும் சர்வதேசத்திற்கும் அவ்வாறான வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

2009இல் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், 13இற்கு அப்பால் சென்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக மஹிந்த வாக்குறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது? இப்போது மீண்டும் உள்ளக பொறி முறை தொடர்பில் பேசுகின்றீர்கள். புலம் பெயர் சமூகத்துடன் பேசவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அரசியல் யாப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாக அமுல்படுத்தமறுத்துவரும், உங்களின் உள்ளக பொறி முறையை சித்தசுவாதீனமுள்ள எவராவது நம்புவாரா?

இந்த அரசாங்கத்தால் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியுமென்பதில் எந்தவொரு நம்பிக்கையும் என்னிடமில்லை. ஏனெனில், நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு காரியத்தையும் நீங்கள் செயலில் காண்பிக்கவில்லை.

உண்மையில், நீங்கள் கூறும் புதிய அரசியல் யாப்பானது – ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட்ட – தமிழ் மக்களின் சமத்துவம் கௌரவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் ஏற்பாடுகளை கொண்டிருக்கின்ற – முக்கியமாக, அவற்றை நாடாளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக மீளவும் பறித்தொடுக்க முடியாத ஏற்பாடுகளை கொண்டிருக்குமானால், அப்படியானதோர் அரசியல் யாப்பை நாம் இரு கரம்கூப்பி வரவேற்போம்.

ஆனால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயங்களை உற்றுநோக்கினால், அரசாங்கத்திடம் அப்படியான எந்தவொரு நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.

மாகாண சபைகள் செயலற்றிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள பாடசாலைகள், மருத்துவமனைகளை திட்டமிட்டு மத்திய அரசின் கீழ் கொண்டு செல்கின்றீர்கள்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூட இப்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் ஓர் இரகசிய படையணியாக தொழிற்படுகின்றதோ என்னும் சந்தேகம் எழுந்திருக்கின்றது எனத் தெரிவித்தார்.

மாணவியை பாடசாலையில் இருந்து வெளியேற்றிய அதிபர்: தந்தை மரணத்தின் மீது ஏறி போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *