முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று இலங்கையை அவமானப்படுத்தி கொண்டிருப்பதைக் காட்டிலும் அவர் இலங்கைக்கு வந்தமை சிறந்த ஒன்று.
நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்காத நிலையில், நாட்டை விட்டு ஓடிய கோட்டாபய ராஜபக்சவிற்கு அதீத பாதுகாப்புடன் கூடிய வீடு ஒன்றை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாட்டை நாசம் செய்துவிட்டு தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில், அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு அரச செலவில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற போது 60 ரூபாவாக இருந்த பாணின் விலை அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற போது 160 ரூபாவாக காணப்பட்டது. தற்போது அவர் நாடு திரும்பியுள்ள நிலையில், பாணின் விலை 300 ரூபாவாக உயர்ந்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களில் நரம்புகள் ஏற்கனவே ரப்பராக இருப்பதால், கொஞ்சம் இரத்தம் வரச் செய்ய வேண்டும். மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் எதிர்காலம் மிகவும் பாரதூரமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்தி விலை அதிகமாக இருந்தால் அதிக வருமானம் உள்ளவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டும். எனினும், குறைந்த வருமானம் உள்ளவர்களிடம் இருந்து வசூலிக்க உடன்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், நாட்டையும் நாட்டுப் பொருளாதாரத்தையும் நாசம் செய்த கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்