நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெவுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
அதற்கமைய, இன்றும் நாளையும் ‘இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இன்று மு.ப 10.30 மணி முதல் 10.45 மணி வரை சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.
2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.