ரி-20 உலகக்கிண்ணம்: டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு!

ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான, எதிர்பார்ப்பு மிக்க தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுக்கு எதிரான நான்காவது ரி-20 போட்டியில் முழங்கையில் காயம் ஏற்பட்டதால், நடந்து வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ள டெம்பா பவுமா, காயத்திலிருந்து மீண்டுள்ளதால், தென்னாபிரிக்க அணியை வழிநடத்துவார் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவின் முதன்மையான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களில் சிறப்பான துடுப்பாட்டத்தை அண்மைக்காலமாக வெளிப்படுத்திவரும் ரஸ்ஸி வான் டி டஸ்சன், மன்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக குறைந்தது ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஆகையால் அவர் அவர் உலகக்கிண்ணத் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் ரீஸா ஹென்ரிக்ஸ், இதுதவிர ரிலீ ரோசோவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் வெய்ன் பார்னெல் ஆகியோர் உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணியின் முதன்மை துடுப்பாட்ட வீரர்களாக ஹெய்டன் மார்கிரம், குயின்டன் டி கொக், டெம்பா பவுமா ஆகியோர் செயற்படவுள்ளனர்.

வேகப்பந்துவீச்சில் ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரும், சுழற்பந்து வீச்சில், டப்ரைஸ் ஷம்சி மற்றும் கேசவ் மஹராஜ் ஆகிய இரு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களும் எதிரணிகளுக்கு சிம்ப சொப்பனமாக திகழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. டுவைன் பிரிட்டோரியஸ் முக்கிய சகலதுறை வீரராக இடம்பெற்றுள்ளார்.

ஜோர்ன் பார்ச்சூன், மார்கோ ஜென்ஸன் மற்றும் ஹென்டில் பெலுக்வாயோ ஆகிய மூன்று வீரர்கள் உலகக்கிண்ண தொடருக்கான மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

டெம்பா பவுமா தலைமையிலான உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் வீரர்கள் விபரம்:

டெம்பா பவுமா, குயின்டன் டி கொக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், ஹெய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரிலீ ரோசோவ், டப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக, தென்னாபிரிக்கா அணி, இந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடரில் விளையாடவுள்ளது. உலகக்கிண்ண தொடருக்காக இடம்பிடித்துள்ள அனைத்து 18 வீரர்களும் செப்டம்பர் 28 முதல் ஒக்டோபர் 04ஆம் திகதி வரை இந்தியாவுக்கு எதிரான ரி20 தொடரில் விளையாட உள்ளனர்.

ரி-20 தொடருக்கு பிறகு நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடும் தென்னாபிரிக்க அணியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெம்பா பவுமா, குயின்டன் டி கொக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், ஜெனிமன் மலான், ஹெய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, வெய்ன் பார்னெல், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் ப்ரிடோரியஸ், காகிஸோ ரபாடா, டப்ரைஸ் சம்ஸி ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *