இப்போது எமது அரசாங்கம் பொருளாதார மீட்சிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கிவருகின்றது. அதனை முன்னிறுத்தி கடன்வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருகின்றோம். இதற்கு ஜப்பான், சீனா மற்றும் பாரிஸ் கிளப்பில் அங்கம்வகிக்கும் நாடுகள் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிக்காட்டியுள்ளன. அதேவேளை இந்தியா எமக்கு தொடர்ந்து ஆதரவை வெளிப்படுத்திவருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
அண்மைக்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமை உள்ளிட்ட சில முன்னேற்றங்கள் அடையப்பட்டிருக்கின்ற நிலையில், அடுத்தகட்டமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் செலவினத்தை ஈடுசெய்யக்கூடியவாறான விலையிடல் முறைமை, வரி மறுசீரமைப்பு, வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாக்கக்கூடியவாறான சமூகம்சார் செயற்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்தல், தரவுகளை அடிப்படையாகக்கொண்ட நிதிக்கொள்கையை உருவாக்கல், மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், வங்கிக்கட்டமைப்பின் நிலைபேறானதன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் ஊழல்மோசடிகளை முடிவிற்குக்கொண்டுவரக்கூடியவாறான சட்டங்களை உருவாக்கல் உள்ளிட்ட விடயங்களை உரியவாறு நிறைவேற்றுவதில் விசேட அவதானம் செலுத்தியிருப்பதுடன் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.
குறிப்பாக பொருளாதார ரீதியான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.
அடுத்ததாக நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஈராக், லிபியா மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகள் இலங்கையைப்போன்று மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தன.
இருப்பினும் அந்நாடுகளின் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகமோசமாகச் சீர்குலைந்ததுடன் அதனையடுத்து அனைத்து அரசகட்டமைப்புக்களும் பலவீனமடைந்தமையினால் அந்நாடுகள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடையமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன.
இருப்பினும் எமது நாட்டில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களால் மிகவும் அமைதியானதும் ஜனநாயகமானதுமான முறையில் எதிர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனூடாக ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி பதவி கவிழ்க்கப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டில் மீண்டும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளளன.
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலவரைபு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், அடுத்தவாரமளவில் அத்திருத்தச்சட்டமூலத்தை அரசியலமைப்பில் உள்வாங்குவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.