கேரளாவின் கடல் பகுதி வழியாக மீன்பிடி படகின் மூலம் கனடாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக 11 இலங்கையர்களை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த இந்த இலங்கையர்களில் இருவர் சுற்றுலா விசாக்களின் மூலம் கடந்த வாரம் தமிழ்நாடு வந்த நிலையில் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. மற்ற ஒன்பது பேர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மறுவாழ்வு முகாமில் வசித்து வந்திருக்கின்றனர்.
முதல் இருவர் காணாமல் போகியதாக அறியப்பட்ட நிலையில் அவர்களின் அலைப்பேசி சமிக்ஞைகளைக் கொண்டு கேரள மாநிலம் கொல்லத்தில் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. பின்னர் கேரள காவல்துறையினர் கொல்லத்தில் உள்ள ஹோட்டலில் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் அங்கு தங்கியிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இப்போது கைது செய்யப்பட்டவர்களுக்கு உள்ளூர் நபர்கள் உதவி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் மேலும் கைதுகள் நடக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக கொல்லம் காவல்துறை ஆணையர் மெரின் ஜோஷப் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாடு கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு இருப்பதால் கேரள கடல் பகுதி வழியாக இவர்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக கொழும்பில் உள்ள லக்மனா எனும் முகவரிடம் ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் 2.5 லட்சம் ரூபாய் செலுத்திருக்கின்றனர்.
அதே சமயம், கடந்த நான்கு மாதங்களில் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற சுமார் 500க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆஸ்திரேலியாவின் கடல் பகுதிகளில் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்