புத்தளம் மாவட்டத்தின் கரையோர பகுதகளில் கழிவுப் பொருட்கள் கரையொதுங்குவதால் சுற்றாடல் பாதிக்கப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
சிலாபம், உடப்பு, சின்னப்பாடு , தொடுவா மற்றும் தளுவ உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் இவ்வாறு கழிவுப் பொருட்கள் கரையொதுங்குவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் போத்தல்கள், பாதணிகள் உள்ளிட்ட பல வகையான கழிவுப் பொருட்கள் இவ்வாறு கரையோரங்களில் ஒதுங்கிக் கிடப்பதாகவும் மீனவர்களும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர்.
இதனால், சுற்றாடல் மாசடைவதுன், கடும் காற்று வீசுகின்ற சந்தர்ப்பங்களில் குறித்த கழிவுகள் கரையோரப் பகுதிகளை அண்டி இருக்கும் வீடுகள், மீன் வாடிகளுக்குள் வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், அடுத்த மாதமளவில் புத்தளம் மாவட்டத்தில் கரைவலை மீன்பிடித் தொழில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு கரையோரப் பகுதிகளில் கழிவுப் பொருட்கள் காணப்படுவது தமது தொழிலுக்கு பாரிய சவாலாக இருக்கும் எனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதுமாத்திரமின்றி, சுத்தமா காற்றையும், கடலோர சுவாத்தியங்களையும் பெற்றுக்கொள்ள கடற்கரை நாடிவரும் மக்கள் மேற்படி குப்பைகளால் வேறு பகுதிகளை நோக்கிச் செல்வதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இலங்கையின் சுற்றுலாப் பகுதிகிளில் கற்பிட்டி பிரதேசமும் ஒன்றாக இருப்பதால், இங்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் முகம் சுழிக்கின்ற அளவு கரையோரப் பகுதிகள் குப்பைகளால் நிரம்பி காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கரையோரப் பகுதிகளை பாதுகாக்கவும், சுற்றாடலுக்கு பாரிய அச்சுறுத்தலை விடுக்கும் குறித்த கழிவுப் பொருட்களை அகற்றி கரையோர பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிற செய்திகள்