கிருசாந்தி
இந்தப் பெயரை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.
ஈழ வரலாற்றில் செம்மணிப் படுகொலை மறக்க முடியாத இனப்படுகொலையின் புதைகுழி.
கிருசாந்தி படுகொலை அரச பயங்கரவாதத்தின் ஆவணங்களில் ஒன்று.
1996 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7 ஆம் திகதி இதேநாளில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சிறிலங்கா பேரினவாத இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசாமியின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
யாழ்ப்பாணத்தின் பிரபல மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் உயர்தர மாணவி கிருசாந்தி குமாரசாமி.
சாதாரண தரப் பரீட்சையில் 7 டி, 1 சி என சிறப்பு பெறுபேற்றிருந்தார்.
தனது ஆறாவது வயதிலேயே தந்தை இழந்தவர். கிருசாந்தியின் தாயார் ராசம்மா குமாரசுவாமி. 59 வயது, இவர் இந்திய பல்கலைகழகமொன்றில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.
கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலய உப அதிபர். அடுத்த வருடம் ஓய்வுபெறக் காத்திருந்தார்.
மூத்த மகள் பிரசாந்தி, கொழும்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார், இரண்டாவது கிருசாந்தி. கடைசி, மகன் பிரணவன், சாதாரணதரப் பரீட்சை முடிவுகளுக்காகக் காத்திருந்தார்,
கிருசாந்தி அன்றையதினம் உயர்தரப் பரீட்சையில் இராசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள்.
காலை 7.15 மணிக்கு பாடசாலைக்குப் புறப்பட்டாள்.
தனது மகளின் பரீட்சை 9.30 க்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது தாயார் ராசம்மாவுக்கு தெரிந்திருந்தது. மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார்.
எனினும், மகள் எதிர்பார்த்த நேரத்துக்கு வீடு திரும்பாததால் அவர் பதற்றமடையத்தொடங்கினார். வாசலில் உட்கார்ந்து கிருசாந்திக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.
அப்போது அவர்களின் குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி அவசர அவசரமாக அங்கு வந்து அந்த துரதிஷ்ட செய்தியை தெிவித்தார்.
கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தி.
செம்மணி காவலரண், தென்மராட்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பரந்த நீர் மற்றும் சதுப்பாலான பகுதி. அங்கு மயானமொன்றும் இருந்தது. அருகிலுள்ள வீதியில் அந்த காவலரண் அமைந்திருந்தது.
விபரீதத்தை உணர்ந்த ராசம்மா தனது மகளை தேடிச்செல்ல கிருபாமூர்த்தியிடம் உதவி கேட்டார். கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக்கொண்டார். அவ்வேளை வீடுதிரும்பிய மகன் பிரணவன் தகவலையறிந்து தானும் தாயுடன் வருவதாகக் கூற மூவரும் காவலரண் நோக்கி விரைந்தனர்.
ஆனால், அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவருமோ வீடுதிரும்பவில்லை.
மறுநாள் காலை கிருசாந்தியின் மாமாவும் இன்னொருவரும் செம்மணி காவலரணுக்குச் சென்று விடயத்தை கேட்டனர்.
யாரையும் கைது செய்யவில்லையென இராணுவம் முழுமையாக மறுத்துவிட்டது. பின்னர், அப்போதைய யாழ்ப்பாண தபாலதிபர் சு.கோடீஸ்வரன் என்பவரைச் சந்தித்து கிருசாந்தியின் உறவினர்கள் விடயத்தை சொன்னார்கள்.
கோடீஸ்வரனும் கிருசாந்தி குடும்பத்தின் நெருங்கிய உறவினர்தான்.
கிருசாந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும்ம் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு கோடீஸ்வரனும், ஏனையவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். முகாம்கள், முகாம்களாக அலைந்தனர். ஆனால், படையினரோ தங்களுக்குத் தெரியாது என கைவிரித்துவிட்டனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் கொழும்பைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி பூபாலன் இந்தச் சம்பவம் குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்,
இதுகுறித்து அப்போது ஆட்சியிலிருந்த சந்திரிகா உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.
விசாரணைகளுக்காக லெப். கேர்ணல் குணரட்ண தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணம் சென்று விசாரணை மேற்கொண்டது.
இதன்போது அந்த அதிர்ச்சி வெளியானது.
தாம் கிருசாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த நிலையில் ஆரம்பத்தில் நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவுமில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை என தர்க்கம் புரிந்தனர்.
கிருசாந்தி தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் அன்று இராணுவத்தினருடன் வாதம் செய்துள்ளார்.
அந்தத் தருணத்தில் கிருசாந்தி ஏற்கனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கிருசாந்தியை விடுவிக்கவும் முடியாது.
இவர்களுக்கோ உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் அம்மூவரையும் பிடித்து, வதைத்து கொன்று விட்டனர்.
அன்று இரவுக்குள்ளேயே இரண்டு பொலிஸாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் கிருசாந்தியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்துள்ளனர்.
இறுதியாக கிருசாந்தி உட்பட நால்வரின் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
சிறிலங்கா படையினர் தங்கள் குற்றங்களை மறைப்பதற்காகவே இந்த தந்திரோபாயத்தை பின்பற்றியுள்ளனர்.