தமிழர்கள் நீதியைக் கேட்டால் இந்த அரசு அவர்களைக் கொல்லும் நடவைடிக்கையில் ஈடுபடுகிறது என நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற கிருசாந்தி படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நினைவனேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செம்மணிப் படுகொலை எம்மால் மறக்க முடியாது.அதிலும் மாணவி கிருசாந்தியின் மரணம் எம்மை விட்டு நீங்காத வடுவாக காணப்படுகிறது.அன்று முதல் இன்று வரை காலத்துக்கு காலம் தமிழ்ப் பெண்கள்,அரச பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதும்,சீரழிக்கப்படுவதும் தொடர்ந்து செல்கிறது.
கொல்லப்பட்ட மாணவி கிருசாந்தியின் மரணம் தொடர்பில் நீதி கேட்கச் சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்களும் கொல்லப்பட்டனர்.தமிழர்கள் எங்கு நீதி கேட்டுச் சென்றாலும் இவ்வாறு தான் அரச பயங்கரவாதம் செய்கிறது.ஆகவே தான் சர்வதேசத்திடம் நாம் நீதி கேட்டு நிற்கும் போது தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் என்று கேட்க்கின்றோம் என்றார்.