இது சிங்கள பெளத்த நாடு, இதன்படி இங்கு பழைய தூபிகளை பராமறிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. வேறு நாட்டில் என்றால் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தை சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல் போயிருப்பார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஆகஸ்ட் 31 ஆம் திகதியன்று தமிழ்க் கூட்டமைப்பு எம்.பியொருவர் முல்லைத்தீவு குறுந்து விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்வதாக தெரிவித்து பொய்யான தகவலை பாராளுமன்றத்திற்கு அறிவித்து, பாராளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.
தொல்பொருள் அகழ்வு பணிகளை நிறுத்துவதற்கான தீய எண்ணத்துடனேயே அவர் அவ்வாறு கூறியுள்ளார். முல்லைத்தீவு நீதிவான் அந்த நிர்மாணத்தை நிறுத்துவதற்கு உத்தரவு வழங்கியிருந்தார்.
அதன் பின்னர் பொலிஸார் நகர்த்தல் பத்திரமொன்று மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுடன் அந்த இடத்திற்கு சென்று அவதானித்து அந்த வழக்கை நீக்கிக்கொண்டுள்ளனர்.
இதன்படி தொல்பொருள் அகழ்வாராட்சி திணைக்களத்திற்கு அதனை பராமறிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
குறுந்து அசோக்க விகாரை என்பது 2000 வருடங்கள் வரையில் பழமையான பௌத்த விகாரை தொகுதியாகும்.
தீபவம்சம் மற்றும் மகாவம்சத்திற்கு அமைய குறுந்து உண்மைக் கதையை எழுதிய வரலாற்று இடமாகும். அங்கு அகழ்வுகளின் போது புத்தர் சிலைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
ஆனால் அங்கு எந்த இடத்திலும் இந்து ஆலயம் இருந்தமைக்கான சாட்சியம் இல்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அன்று நடந்த சம்பவத்திற்கு வெட்கப்பட வேண்டும்.
இங்கு புனித சின்னங்களை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு ஜுன் 12 ஆம் திகதி நடைபெற்றது. இதற்கு பௌத்த பீடங்களின் மஹாநாயக்க தேரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் குண்டர் குழுக்களுடன் சென்று அதனை குழப்பினர். மலர் ஒன்றை வைத்துக்கூட பூஜை செய்ய முடியாத வகையில் பிக்குகள் திரும்பியிருந்தனர்.
இந்த பௌத்த நாட்டில் பெளத்த சாசனத்தை அவமதிக்கும் வேலையை செய்தும், பெளத்தர்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பதை மௌனித்திருப்பதாக கருத வேண்டாம் என்று அன்று நான் பாராளுமன்றத்தில் கூறினேன்.
அன்று விடுதலைப் புலிகள் மக்களையும், அரந்தலாவ பிக்குகள் உள்ளிட்டவர்களை கொலை செய்யும் போதும், கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடந்தன.
பௌத்தர்கள் எந்தத் தடைகளையும் ஏற்படுத்தவில்லை. அதனால் நீங்கள் செய்யும் வேலையால் அனைத்து தமிழ் மக்களுக்கும் அவமானத்தையே கொண்டுவந்துள்ளது.
இது பௌத்த நாடாகும். சிங்கள பெளத்த நாடு என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்குலக நாடொன்றின் தூதுவர் ஒருவர், ஏன் இதனை சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றீர்கள் என்று ஒருவரிடம் கேட்டுள்ளார்.
நீங்கள் தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன் துறைக்கு ஹெலிகப்டரில் போகும் போது தெரியும் விகாரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளமையினாலேயே அவ்வாறு கூறுவதாக தூதுவருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
இங்கு பழைய தூபிகளை பராமறிக்க எவருடைய அனுமதியை பெற்றுக்கொள்ளவும் அவசியமில்லை. அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும். எந்தளவுக்கு இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிகள் இந்த நாட்டில் அமைக்கப்படுகின்றன. அதற்கு பௌத்தர்கள் ஒருபோதும் எதிர்ப்பு வெளியிடுவதில்லை.
இதேவேளை அவர் வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டாம் என்று கோசங்களை எழுப்பிவிட்டு கொழும்புக்கு வந்து மீண்டும் வடக்கிற்கு போவதானது இது பௌத்த நாடு என்பதனாலேயே ஆகும் என்பதனை குறித்த எம்.பி நினைவில் கொள்ள வேண்டும்.
வேறு நாட்டில் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தை சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல் போயிருப்பார். ஆனால் குறுந்து விகாரை பராமறிப்புக்காக இடைவிடாது செய்யும் இடையூறுகளை நிறுத்துமாறு நாங்கள் மிகவும் வினயமாக அவர்களிடம் கேட்கின்றோம்.
இதேவேளை இந்த நடவடிக்கைகளால் இனச் சுத்திகரிப்பு செயற்பாடு நடக்கும் என்று குறித்த எம்.பி கூறியுள்ளார்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் 25,000 வரையிலான சிங்கள குடும்பங்கள் இருந்தன. இப்போது எத்தனை பேர் இருக்கின்றனர்.
அங்கு இப்போது எவ்வளவு முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன. உண்மையில் இனச் சுத்திகரிப்பு நடந்திருந்தால் சிங்களம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடந்திருக்கும்.
இதனால் இந்த எம்.பிக்களுக்கு சரியான பாதைகளை காட்டுங்கள், இல்லாவிட்டால் இவர்களை விரட்டியடிங்கள் என்று நான் தமிழ் முக்கியஸ்தர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.- என்றார்.
பிற செய்திகள்