புத்தளம் – புளிச்சாக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் வேளாண்மை விவசாயம் சந்து குத்தி எனும் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதனால் தாம் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
புளிச்சாக்குளம் பகுதியில் சிறுபோகத்தை நம்பி இம்முறை 30 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
எனினும், சிறுபோக விவசாயத்திற்கு தேவையான உரம், கிருமி நாசினிகள் என்பன வழங்கப்படாமையினால் இந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை சந்து குத்தி எனும் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடன்களைப் பெற்றும், தங்க நகைகளை அடகு வைத்தும் ஒரு ஏக்கருக்கு இரண்டு இலட்சத்திற்கும் மேல் செலவு செய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், மேற்படி நோயினால் தாம் எதிர்பார்த்த விளைச்சளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமக்கு இலாபம் கிடைக்காவிட்டாலும், விவசாய நடவடிக்கைகளுக்காக தாம் பெற்ற கடன்களை கூட இந்த அறுவடையின் போது செலுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் தமது வாழ்வாதாரத்தை பாதித்துள்ள நிலையில், வேளாண்மை விவசாயமும் இம்முறை தமக்கு பெரும் தலையிடியைக் கொடுத்திருப்பதாகவும் புளிச்சாக்குளம் வேளாண்மை விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ள பெரும்போக வேளாண்மைக்கு தேவையான உரம், கிருமி நாசினிகள் என்பனவற்றையாவது சீரான முறையில் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிற செய்திகள்