ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள உறுதிமொழி!

தேசியப் பிரச்சினை இன்னும் சில மாதங்களில் தீர்க்கப்படும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (14-09-2022) தெரிவித்துள்ளார்.

இலங்கை 30 வருடகால யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதுடன், தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதக் குழுக்கள் இலங்கையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்த முடியும், மேலும் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பது எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்ளும் பாரிய சவாலாகும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் வல்லரசு நாடுகளுக்கிடையிலான போட்டியை இலங்கை காண விரும்பவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, இந்து சமுத்திர பிராந்தியத்தை அமைதியான பிரதேசமாக காண இலங்கை விரும்புவதாகவும் வலியுறுத்தினார்.

இந்தப் பிராந்தியத்தில் இலங்கை ஒருபோதும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் உள்ள அனைத்து துறைமுகங்களும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பங்கு கடன் மேலாண்மை நடவடிக்கை மட்டுமே.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, அதனை உலகிற்கு திறந்து வைத்து, சக்தி வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி தேசிய பாதுகாப்பு அகாடமியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *