இந்தியை திணிக்க முன் தமிழருடைய பிரச்சனைகளில் இந்தியா தலையிட வேண்டும்! – தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை

இந்தியா இந்தி மொழியை திணிப்பதற்கு முன்பாகவோ அல்லது மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை அரங்கேற்ற முன்பாக முதலில் எங்களுடைய தேசிய பிரச்சினையாக இருக்கின்ற உரிமைப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சு.நிஷாந்தன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கான எந்த திட்டத்தையும் இந்தியா மேற்கொண்டதாக தெரியவில்லை.

தமிழ் சார்ந்த விஷயங்களை புறக்கணித்து தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றும் வகையில் மதம் சார்ந்த விடயங்களையும் மொழி சார்ந்த விடயங்களையும் இங்கு திணித்துக் கொண்டிருக்கின்றனர்.

13ம் திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா வலியுறுத்துகின்றது. ஆனால் 13ம் திருத்தத்தை முற்றுமுழுதாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவிற்கும் இந்தியாவின் ஆதரவில் இயங்குகின்றவர்களுக்கும் நாம் சொல்கின்ற விடயம், 13 என்பது தமிழ் மக்களின் இறுதி தீர்வு கிடையாது. இடைக்கால அரசாங்கத்தில் 13ஆம் திருத்தத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் அது இறுதித் தீர்வல்ல.

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் வட கிழக்கு இணைத்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இந்திய தூதரகமோ இந்திய சார்பானவர்களோ, இந்தி மொழியை திணிப்பதற்கு முன்பாகவோ அல்லது மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை அரங்கேற்ற முன்பாகவோ முதலில் எங்களுடைய தேசிய பிரச்சினையாக இருக்கின்ற உரிமைப் பிரச்சனைகளில் இந்தியா தலையிட வேண்டும். அவற்றை செய்ததன் பின்னர் வடகிழக்கை இணைத்து நான்கு வருடங்களாக இடம்பெறாமல் உள்ள மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்.

அந்த மாகாணசபை ஊடாக காணி பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக் கொடுத்துவிட்டு அதன் பின்னர் உங்கள் நிகழ்வுகளை இங்கே வந்து கொண்டாடுங்கள். நாங்களும் இணைந்து கொண்டாடுகிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பயங்கரவாதத் தடை சட்டம் போன்றவற்றை நீக்குவதற்கு இந்தியா என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

இந்தியா வடகிழக்கில் ஆதிக்கத்தை செலுத்த வேண்டுமாக இருந்தால் இவ்வாறான திணிப்புகளை நிறுத்தி நமது கலாசாரத்தை சிதைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து விட்டு ஏனைய விடயங்களை பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கும் இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply