தமிழர்களின் உணர்வினை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விரட்டியடிப்போம்- ஜனநாயக போராளிகள் கட்சி

தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சிலர் தீவிரமான முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். தொடர்ந்து போராளிகள் இந்த நிலைமைகளை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனுடைய நினைவு தினத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேய கதிர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தியாகதீபம் திலீபனின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக இருக்கின்றது. தமிழ் மக்களுடைய விடுதலைக்காக ஜனநாயக வழியில் அஹிம்சை போராட்டத்தை திலீபன் மேற்கொண்டார்.

இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஷ், மூத்த தளபதியான பஷீர் காக்காவுட் முரண்பட்டதை பார்த்தோம்.

பஷீர் காக்காவுக்கு உள்ள உரிமை அரசியல் கட்சிகளுக்கு கிடையாது. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சிலையை கட்டிவிட்டு நீங்கள் அரசியல் செய்யுங்கள்.

அப்போது மக்கள் உங்களை எவ்வாறு பார்ப்பார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். நாங்கள் எந்தநேரமும் பொறுமையாக இருப்போம் என எண்ணிவிடாதீர்கள்.

தாயகப் பகுதியில் உங்கள் அலுவலகங்கள் இல்லங்கள் ஆயிரக்கணக்கான போராளிகளால் 24 மணி நேரத்துக்குள் முற்றுகையிடப்படுவதுடன் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கின்றேன்.

தமிழ் தேசிய விரோத குழுக்களால் மக்களுக்கான தலைமைத்துவம் சிதைக்கப்பட்டிருக்கின்றது.

போராளிகள் வகுப்பெடுக்ககூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவர் கூறுகின்றார். போராளிகள் எடுத்த வகுப்பிலேயே நீங்கள் தற்போது அரசியல் பேசுகின்றீர்கள்.

அரசியலுக்காக தமிழ் தேசிய போராட்டத்தை விற்றுப் பிழைக்காதீர்கள். அதை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க போவதில்லை.

மக்களுக்கு உண்மையான நேர்மையான தலைமைத்துவத்தை வழங்க நாம் தயாராகிக் கொண்டே இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் இல்லை என்பதற்காக நாங்கள் தான் தமிழ் தேசியவாதிகள் என கூறிக்கொண்டு யாரும் இங்கு வரக்கூடாது.

அக்கட்சியினுடைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சுகாஸ் போன்றவர்கள் போராளிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு அரசியலை முன்னெடுக்கின்றீர்கள்.

இந்த வங்குரோத்தான அரசியல் நிலைமையில் இருந்து ஒருபோதும் நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.

நாங்கள் கடந்த காலங்களில் மிகப்பெரிய துன்பங்களை சுமந்து போராடியபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உங்கள் தேசிய பற்று எங்கே போனது?

எதிர்காலத்தில் இதற்காக மிகப்பெரிய விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள். உங்களை விரட்டி அடிப்போம் என்பதை இந்தவிடத்தில் கூறிக்கொள்கின்றேன் – என்றார்.

Leave a Reply