யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத சுருக்குவலைத் தொழில் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு வழிகளில் நாம் வாழ்வாதரத்தை இழந்துள்ளோம். இந்த நிலையில் இப்போது சுருக்கு வலை பிரச்சனை ஆரம்பித்துள்ளது. வடமராட்சி கிழக்கில் இது அதிமாக காணப்படுகிறது.
காலை 6 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை அனுமதிக்கப்பட்ட வலைக் கண் அளவில் மீன்பிடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது பரவலாக சுருக்கு வலையை பயன்படுத்தி தொழில் இடம்பெறுகிறது.
இந்த தொழிலால் 100 குடும்பம் நன்மை அடைந்தால் 7000 குடும்பங்கள் சிக்கலை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது.
வெற்றிலைக்கேணி கடற்படை நினைத்தால் இதனை தடுக்கலாம். இரண்டே முக்கால் இஞ்சி வலைகளை பயன்படுத்தலாம். அதனை விட குறைவான அளவில் அதாவது நுளம்பு நெற் போன்ற வலைகளை பயன்படுத்தக் கூடாது. இலஞ்சம் வாங்கி விட்டு இதனை கண்டு கொள்ளாமல் கடல் படை உள்ளிட்ட பலர் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே சிறுதொழிலாளர்களின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்.
அரசாங்கம் ஒன்றை தெளிவாக எமக்கு கூற வேண்டும். தடை செய்யப்பட்ட தொழிலை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது. மிகப்பெரிய பொறுப்பு கடல் படைக்கே உள்ளது. அரச அதிகாரிகள் கடலில் இதை மேற்கொள்ள முடியாது. சுருக்கு வலை தொழிலை கட்டுப்படுவதாக எமக்கு அவர்கள் கூறியிருந்தனர். கடல் படை முகாம்களை தாண்டிதான் சட்ட விரோத மீன்பிடி இடம்பெறுகிறது. அதை கடல் படை கண்டுகொள்ளவில்லை.
ஆகவே உங்களால் முடியவில்லை என்றால் எம்மிடம் தாருங்கள். நாங்களே பார்த்துக்கொள்கின்றோம். அதே போன்று கடல் அட்டை தொழில் என்பது, முதலாளித்துவ மயமாக மாறி விட்டது. இதனால் யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய தொழிலுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே சண்டை வரும் நிலை உருவாகலாம். கடல் தொழிலுக்கு இடையூறாக உள்ள கடல் அட்டை பண்ணைகளை அகற்றுமாறு அமைச்சருக்கு கூறி இருந்தோம்.
இன்று வரை அது நடைமுறையில் இல்லை. பூநகரி கிராஞ்சி பகுதியில் இடம்பெற்று வரும் குழப்ப நிலை, யாழ்ப்பாணத்துக்கும் வரும். கடல் அட்டை பண்ணையாளர்கள் விரைவில் யாழ் மாவட்ட கடல் தொழிலாளர்களை நசுக்குவார்கள். கடல் அட்டை பண்ணைகளை நாம் எதிர்க்கவில்லை.
மீன் குஞ்சுகள், இறால் குஞ்சுகளை அழித்து பண்ணைகளை செய்ய வேண்டாம். ஆகவே அட்டை பண்ணைகளை மட்டுப்படுத்துமாறு தான் நாம் கேட்க்கின்றோம்.
தமிழர் ஒருவர் கடல் தொழில் அமைச்சராக இருப்பதை நாம் விரும்பினோம். ஆதரவு வழங்கினோம். அவரால் இன்று வரை எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. கடல் தொழில் அமைச்சர் இருப்பதால் பாரம்பரிய கடல் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள், முதலாளித்துவ வர்க்கம் வளர்த்துக்கொண்டு செல்கின்றனர்.
ஆகவே இது தொடர்பில் விரைவில் தமிழ் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டங்களில் ஓம் ஓம் என்று சொல்லுவார்கள், ஆனால் நடைமுறைப்படுத்த மாட்டார்கள்.-என தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்