முல்லைத்தீவில் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசாங்கம் முயற்சி- ரவிகரன்

முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் அரசாங்கத்தின் சில திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக துரைராசா ரவிகரன் மேலும் கூறியுள்ளதாவது, “வட்டுவாகலை அண்மித்த பகுதிகளில் 617 ஏக்கர் காணிகள் கடற்படை வசமும் 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராணுவத்தின் வசமும் உள்ளன.

மேலும் பெரிய விகாரை ஒன்றையும் அப்பகுதியில் அமைத்து, பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றனர்.

இதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக  வட்டுவாகல் நந்திக் கடல் மற்றும் நந்திக் கடல் சேர்ந்த பகுதிகளில் உள்ள சுமார் 10230 ஏக்கர் நிலப்பரப்பை  வன ஜீவராசிகள் திணைக்களம், தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

மேலும் முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகள், முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களுக்கும் வட்டுவாகல் மக்களுக்கும் உரியவையாகும்.

இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி, வட்டுவாகல் பகுதியில் கடற்படையினருக்கான காணி அளவீட்டிற்காக,  நிலஅளவைத் திணைக்களத்தினர் சென்றவேளை அவர்களை வழி மறித்த மக்கள், எதிர்ப்பினை தெரிவித்து  போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *