வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கொவிட் வைரஸ் கசிந்தது: அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான், கொரோனா வைரஸ் (கொவிட்-19) கசிந்தது என அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மெக்கால் தலைமையிலான குழு நேற்று (திங்கட்கிழமை) ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டனர்.

இதில் ‘வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா தீநுண்மி கசிந்ததற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. 2019, செப்டம்பர் 12ஆம் திகதிக்கு முன்னரே இது நிகழ்ந்திருக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது.

ஆனால், வூஹானில்தான் கொரோனா வைரஸ் தோன்றியது என்பதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்டிருந்தாலும் உலகின் வேறுபட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்பது சீனாவின் வாதம்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது என பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

முன்னதாக மே 28ஆம் திகதி, மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உளவு அமைப்புகளுக்கு 90 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply