யாழ். போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சிறீ. பவானந்தராஜா அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (03) யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலையில் இதுவரை நாளொன்றிற்கு 120 ஜம்போ ஒக்சிசன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது நாளொன்றிற்கு 180 ஜம்போ ஒட்சிசன் சிலிண்டர்கள் வரை தேவைப்படுகிறது.
இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக வைத்தியசாலை வாகனம் நாளொன்றுக்கு மூன்று தடவைகள் அனுராதபுரம் சென்று சிலிண்டர்களை எடுத்து வரும் நிலைமை உருவாகியுள்ளது.
எனவே, இந்நிலைமையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுதல், சமூக இடைவெளிகளை பின்பற்றுதல், முகக்கவசங்களை உரிய முறையில் அணிதல், தேவையற்று வெளியே நடமாடுதல், சுகாதார நடைமுறைகளை உரியவாறு பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் சமூகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.