சேவையை தொடர நாம் கோரிய 30 லீற்றர் பெற்றோல் தேவை – முச்சக்கரவண்டி சாரதிகள்

வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை ஐந்து லீற்றர் அதிகரிக்குமாறு ஜனாதிபதி பரிந்துரை செய்த போதிலும் சேவையைத் தொடர தாம் கோரிய 30 லீற்றர் பெற்றோலை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா இன்று (செவ்வாய்க்கிழமை) ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது தாங்கள் எதற்காக 30 லீற்றர் பெற்றோல் கேட்கின்றோம் என குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் தங்களின் பிரச்சினைக்கு பதில் கூறாமல் அலட்சியமாக இருந்தனர் என்றும் எனினும் பின்னர் ஜனாதிபதி 5 லீற்றர் பெற்றோலுக்கு பரிந்துரை செய்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டயர்கள், டியூப்கள்,பேட்டரிகள் மற்றும் வாகன சேவைக் கட்டணங்கள் மீதான வரிகள் இன்னும் அதிகமாக இருப்பதால் சேவையைத் தொடர இது உதவாது என்றும் அவர் கூறினார்.

தங்களுக்கு 15 லீற்றர் பெற்றோல் கிடைக்கும் என்று உறுதி செய்யப்படாத வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் ஆனால் தேவையான அளவு கிடைக்கும் வரை, கட்டணத்தை குறைப்பது பற்றி யோசிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே தங்களின் சேவையை வலுப்படுத்தும் வகையில் தங்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு மீண்டும் அரசிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *