இலங்கையில் ஒரு இலட்சமாக குறைவடைந்த ஐந்து இலட்சம் ரூபா! விரிவுரையாளர் தகவல்

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் பார்க்கும் போது இந்த வருடம் ஒக்டோபர மாதம் பணவீக்கம் 70 சதவீதமாக இருக்கின்றது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி சுருங்கியிருக்கின்றது. இன்னொரு பக்கம் பணவீக்கம் அதிகரித்துச் செல்கின்றது.

அதை தெளிவாக மக்கள் புரிந்து கொள்ளும் படி சொல்வதென்றால் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நீங்கள் ஒரு இலட்சம் ரூபா வைத்திருப்பீர்கள் என்றால், அந்த ஒரு இலட்சம் ரூபாவின் தற்போதைய பெறுமதி வெறும் முப்பதாயிரம்(30,0000) ரூபா மாத்திரம் தான்.

இதன்படி, ஐந்து இலட்சம் ரூபா வருமானம் பெறுகின்ற நபர் ஒருவர் இருப்பாராக இருந்தால் அந்த பணத்தின் தற்போதை பெறுமதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதன் பெறுமதி ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மாத்திரம் தான்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஐந்து இலட்சம் ரூபாவின் கொள்வனவு பெறுமதி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மாத்திரம் தான்.

நாட்டினுடைய பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டிலே இந்த வருடத்தின் முதலாம் காலாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டிலே கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதாவது பொருளாதாரம் மறைபெறுமானத்தைக் கொண்டிருக்கின்றது. அடுத்து வரும் காலாண்டுகளிலும் இது தொடரும்.

இலங்கையில், தொடர்ச்சியாகவே அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மறைபெறுமானத்தைக் கொண்டதாகத்தான் இந்த வளர்ச்சி இருக்கும் என்று சர்வதேச அளவில் பல கருத்துக்கள் உள்ளன.

ஒரு பொருளாதாரம் இரண்டு காலாண்டுப் பகுதிகளிலே எதிர்க்கணிய வளர்ச்சியை பதிவு செய்யுமானால் அந்த பொருளாதாரம், பொருளாதார பின்னடைவில் இருப்பதாக அர்த்தம்.

ஆகவே, எங்களுடைய பொருளாதாரம் தெளிவான வகையிலே பொருளாதார பின்னடைவில் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *