மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் கமல்ஹாசன்?

தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிலும் குறிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத் தலைவராக இருந்த பொள்ளாச்சியை சேர்ந்த மகேந்திரன் திமுகவில் சேர்ந்த பிறகு, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வெற்றிவாய்ப்பை இழந்தாலும் அத்தொகுதி மக்களை சந்தித்து நன்றி கூறவும், கட்சியின் கொடியேற்று விழாக்களில் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தார்.

மகேந்திரனும், அவர் பின்னால் பல நிர்வாகிகளும் சென்றிருந்தாலும் கோவையில் கட்சியின் பழைய பலத்தை தக்க வைத்துக் கொள்வது உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களோடு… கொடியேற்று விழாக்களில்தான் இந்த பயணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால் திடீரென கொடியேற்றும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று (3) கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்…

“உங்கள் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சிகளை ரத்து செய்திருக்கிறீர்கள். இது ஆளுங்கட்சியின் நெருக்கடியா?”

“இல்லை. கோவிட் என்பது மக்களுக்கான நெருக்கடி. ஆளுங்கட்சியின் நெருக்கடி கட்சி பார்த்து கொடுக்காமல் மக்களின் நலன் பார்த்துக் கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன். ஏனென்றால் இந்த அலை தேதி குறித்து வருவதில்லை. திடீரென பார்த்தால் ஒரு நாளைக்கு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்கள் கட்சியின் தொண்டர்கள், சகோதரர்களை பலரை கொரோனா தொற்றுக்கு நாங்கள் இழந்திருக்கிறோம். அவர்களில் சிலரின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறி வந்தேன்” என்றார் கமல்.

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் வெளியேறி வருகிறார்களே?” என்ற கேள்விக்கு, ”இரண்டு கட்டமா? இரண்டாம் கட்டமா? நான் சௌரியமான செவிடு” என்று சொல்லி சிரிக்கிறார்.

”மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிரான பெரிய அணியை திரட்டி வருகிறார். நீங்கள் ஏற்கனவே மம்தாவோடு அரசியல் ரீதியான நட்பில் உள்ளவர். அவர் திரட்டும் அணியில் நீங்கள் இணைய வாய்ப்பிருக்கிறதா?” என்ற கேள்விக்கு,

“மம்தா பானர்ஜி என்னைவிட மூத்த அரசியல்வாதி. என் மேல் அதிக அன்புகொண்டவர் அவர். சூழல் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு அவர்கள் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அதில் இணைவது பற்றி முடிவெடுப்பேன்” என்று பதிலளித்தார் கமல்ஹாசன்.

மம்தா திரட்டும் பாஜகவுக்கு எதிரான அணியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. மம்தா இது தொடர்பாக சோனியா, ராகுல், கனிமொழி உள்ளிட்டோரைச் சந்தித்திருக்கிறார்.

இந்நிலையில் மம்தா அழைத்தால் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இணைவேன் என்று கமல் சொல்லியிருக்கிறார். இதன்மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான திமுக அணியில் கமல் இணைவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Leave a Reply