வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாகும் பிரபல நடிகை

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படம் வெளியானது. தற்பொழுது, இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஆச்சார்யா’.

கொரட்டல்ல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. ரிலீஸூக்கான பணிகள் நடந்துவருகிறது.

அடுத்தக் கட்டமாக, இரண்டு படங்களை ஒரே நேரத்தில் துவங்குகிறார் சிரஞ்சீவி. மோகன்லால் நடித்து ப்ரித்வி ராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றப் படம் ‘லூசிஃபர்’. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை மோகன் ராஜா இயக்க இருக்கிறார்.

இது, சிரஞ்சீவியின் 153வது படம். இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். அதோடு, படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் பணிகள் ஒரு பக்கம் நடந்துவர, இன்னொரு படமும் சிரஞ்சீவிக்கு விரைவில் துவங்க இருக்காம். அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி பெரிய ஹிட்டான படம் ‘வேதாளம்’. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார்.

லூசிஃபர் ரொம்ப சீரியஸான மாஸ் கதை. இதற்கு அப்படியே எதிராக செம ஜாலியான கமர்ஷியல் படம் வேதாளம். இரண்டு ஃப்ளேவர்களில் தெலுங்கு ரசிகர்களுக்கு படம் உருவாகிறது.

இந்தப் படம் குறித்த கூடுதல் தகவலொன்றும் இருக்கிறது. வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக லெட்சுமி மேனன் நடித்திருப்பார். அஜித் கேரக்டர் போலவே லெட்சுமி மேனன் ரோலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். தெலுங்கு வெர்ஷனில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறாராம்.

தெலுங்கில் ‘மகாநடி’ படத்தின் மூலம் மிகப்பெரிய நற்பெயரைப் பெற்றுவைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தற்பொழுது, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்க இருக்கிறார்.

Leave a Reply