கனடாவுக்குச் செல்லும் நோக்கில் தென் சீனக் கடற்பரப்பில் மூழ்கிக்கொண்டு இருந்த படகில் இருந்த இலங்கை அகதிகள் தாய்நாட்டுக்கு மீளத் திரும்பு வதற்கு விரும்பவில்லையென அறிவித்துள்ளனர்.
வியட்நாம் நாட்டில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 அகதிகளில் பெரும்பாலானோர் தமது நிலைப்பாட்டை அந்நாட்டு அதிகாரிகளுக்கு நேற்று தெரியப்படுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில் கனடாவுக்குச் செல்வதே தமது நோக்கமென்று ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் பிரதி நிதிகளிடமும் இந்த விடயத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையிலிருந்து அகதிகளாகச் சென்றோரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இருப்பதால் நாட்டில் மிகக் கடுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அஞ்சுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உயிர்வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளதாகவும் அகதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாம் மீண்டும் நாடுகடத்தப்பட்டால் நீண்டகால விசாரணைகள், தடுப்புக்காவல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என அஞ்சுவதாக அவர்கள் ஐ.நா. முகவர்களிடம் தெரிவித்துள்ளனர்.