இலங்கை சார்பில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.
தனியாள் குதிரையேற்றப் போட்டியில் மெதில்டா கார்ல்ஸன் இன்று பங்கேற்றிருந்தார். இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை கார்ல்ஸன் பெற்றிருந்தார்.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த ஏனைய வீரர்கள் தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை பெற தவறியிருந்தனர்.
Advertisement
இந்த நிலையில், இறுதியாக மெதில்டா கார்ல்ஸன் மீது இலங்கை ஒலிம்பிக் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
எனினும், குதிரையேற்ற போட்டியில் கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறி இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்ததுடன், இலங்கையின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்து போனது.
1984 செப்டெம்பர் 27ஆம் திகதி கண்டியில் பிறந்த மெதில்டா, 3 மாத கைக்குழந்தையாக இருந்தபோது, சுவீடன் நாட்டைச் சேர்ந்த தம்பதியினரால் அவர் தத்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் ஜேர்மனியில் கணவருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில், தான் பிறந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்று, இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.