மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை மறக்க செய்த ஹிஷாலினிக்கு நன்றி : ரிஷாத் பதியுதீன் வீட்டுப் பணிப்பெண்

“மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை மறக்க செய்த ஹிஷாலினிக்கு நன்றி ” என்று ஒரு நண்பர் முகநூலில் விரக்தியாகப் பதிவிட்டிருந்தார். அதில் உண்மை உண்டு. தன் சொந்த மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கை மட்டுமல்ல நாட்டில் நடப்பிலுள்ள பல பிரச்சினைகளை மறப்பதற்கு அல்லது கடப்பதற்கு அல்லது ஒத்தி வைப்பதற்கு ஹிஷாலினியின் மரணம் உதவியிருக்கிறதா?

ஹிஷாலினியை முன்வைத்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கருத்துக்களை திரட்டுவது என்பது அதன் விளைவுகளைக் கருதிக் கூறின் முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வுகளை தூண்டி விடுவதுதான். இதுவிடயத்தில் ரிசார்ட் குற்றவாளியா இல்லையா என்பதனை நீதிமன்றமே தீர்மானிக்கும். ஆனால் ஒரு மக்கள் பிரதிநிதியாக ஒரு கட்சியின் தலைவராக அவர் பொறுப்புடன் நடந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. ஹிசாலினியின் வயதில் தனக்கொரு மகள் இருக்கத்தக்கதாக தனது மகளை பாடசாலைக்கு அனுப்பிக் கொண்டு அதே வயதுடைய இன்னொரு பெண்ணை பணிப் பெண்ணாக வீட்டில் வைத்திருந்தமை என்பது அறம் சார்ந்த ஒரு குற்றச்சாட்டு. மேலும் அச்சிறிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட மிகச் சிறிய அறை பற்றிய தகவல்களும் ரிசாத் பதியுதீன் மீது குற்றம் சுமத்த போதுமாக இருக்கிறது.

அவருடைய கட்சியின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அமீரலி பின்வருமாறுதெரிவித்துள்ளார். “இந்த சிறுமியின் பின்னணியில் இருந்த பிரச்சினை என்ன, அவர் எவ்வா-றான பாதிப்புகளுடன் இந்த தொழிலுக்கு வந்தார் என்பதும் தெரியாது. ஏழு மாதங்கள் மாத்திரமே ரிஷாத் வீட்டில் பணிபுரிந்துள்ளார். எனவே பின்புலம் என்னவென்பதை எம்மால் கண்டறிய முடியாது. ஆக-வேதான் நாம் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தாது சகல விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கி வரு-கின்றோம். கடந்த சில காலமாக ரிஷாத் பதியுதீனுக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டு வருகின்றது. அர-சாங்கமும் சில ஊடகங்களும் திட்டமிட்டு அவரை அரசியலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆகவே இதனை நாம் கவனமாக கையாண்டு வருகின்றோம்.” மேலும் அவர் ஒரு விடயத்தை குறிப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார்”ஹிஷாலினியின் தாயாருக்கு உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது, எனவே அவரது தாயாரே இந்தச் சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும்”

Advertisement

ஆனால் ஹிஷாலினியின் தாயார் இப்பொழுது தெரிவிக்கும் தகவல்கள் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக ஒரு பொதுக்கருத்தை திரட்டுவதற்கு முயற்சிப்பவர்களுக்கே அதிகம் உதவுபவைகளாக இருக்கின்றன.

ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ரிசாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமாக இருந்தால் அது அவருடைய அரசியல் வாழ்வை மேலும் பாதிக்கும். அவர் இப்பொழுது ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக அவர் தண்டிக்கப்படுவாராக இருந்தால் அது அவரை அவருடைய சமூகத்தில் தியாகியாக்கி விடும். அதனால் அவருடைய வாக்குவங்கி தொடர்ந்தும் வளரும். அவர் சிறையில் இருந்தபடியே கட்சியை வளர்க்க கூடியதாக இருக்கும். அது மட்டுமல்ல எதிர்காலத்தில் ரவுப் ஹக்கீம் போன்ற அதிகம் மிதவாதப் பண்புமிக்க முஸ்லிம் தலைமைகளுக்கு சவால் விடக்கூடிய வளர்ச்சியாகவும் அது அமையலாம்.

ஆனால் ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் குற்றம் காணப்படுவாராக இருந்தால் அது அவருடைய அரசியல் வாழ்வுக்கு ஒரு பெரிய தடையாக அமையக்கூடும். இந்த வழக்கில் அவர் குற்றஞ்சாட்டப்பட்டவாராக இருந்தால் அவர் தியாகியாக முடியாது.மாறாக குற்றவாளியாகவே பார்க்கப்படும் ஒரு நிலைமை தோன்றும். அது அவருடைய அரசியல் வாழ்வை பாதிக்கும்.

ஆனால் இங்கு முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டியது என்னவென்றால் அது அவருடைய அரசியல் வாழ்வை மட்டும் பாதிப்பதோடு நிற்கப் போவதில்லை. அதற்குமப்பால் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஓர் அரசியல் போக்கை அது மேலும் தூண்டக்கூடியதாக அமையும்.

இப்போதிருக்கும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததே தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கேட்டுத்தான். தனிச்சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மை எனப்படுவது அதன் கோட்பாட்டு அடிப்படையிலும் பிரயோகத்திலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரானதே. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதன் மினுமினுப்பை இழக்கத் தொடங்கியிருக்கிறது. எனினும் அது அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்யும் செய்யும் ஒரு வளர்ச்சி அல்ல என்பதைத்தான் அண்மையில் நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது. எந்த வைரஸ் அரசாங்கத்துக்கு வெற்றிகளை பெற்று கொடுத்ததோ அதே வைரஸின் பொருளாதார விளைவுகளால் அரசாங்கம் திணறுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக்கொடுத்த மக்கள் அரசாங்கத்தை அதிருப்தியோடு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அரசாங்கத்தின் வெற்றிக்குச் சரிகை வேலைப்பாடு செய்து கொடுத்த பங்காளிக் கட்சிகளும் மத குருக்களும் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள்.

இவ்வாறாக மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதன் மினுக்கத்தை இழக்க தொடங்கியிருந்த ஒரு பின்னணியில் அரசாங்கம் பசில் ராஜபக்சவை இறக்கி ஒரு மாற்றத்தை காட்ட முற்பட்டது. ஆனால் பசில் ராஜபக்ச வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கிடையிலேயே சிறுமி ஹிசாலினியின் மரணம் அரசாங்கத்துக்கு புதிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறதா?

அரசாங்கம் இப்பொழுது எதிர்கொள்ளும் எல்லாவிதமான நெருக்கடிகளில் இருந்தும் குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் தப்புவதற்கு அல்லது நெருக்கடிகளை திசை திருப்புவதற்கு ஹிசாலினியின் மரணம் உதவியிருக்கிறது என்பதே உண்மை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக்கொடுத்த மக்களின் அதிருப்தியை ரிசாட் பதியுதீன் மீதான கோபமாக மடை மாற்றம் செய்வதன் மூலம் அரசாங்கம் பல விடயங்களை கடந்து போக முடியும்.வரும் செப்டம்பர் மாதம் வரையிலும் இந்த விவகாரத்தை வைத்து காலத்தை தள்ளினால் செப்டம்பர் மாதம் ஐநாவின் நிதியாண்டு ஆரம்பமாகும். அப்பொழுது கடந்த ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் தகவல்களைத் திரட்டுவதற்கான ஒரு பொறிமுறையை ஐநா அறிவிக்கும். இந்தப் பொறிமுறை தென்னிலங்கையில் பலமான எதிர் உணர்வுகளை தூண்டிவிடும். நாட்டின் வெற்றி நாயகர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தத் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டும் ஒரு பொறிமுறையாக அதை உருப்பெருக்கிக் காட்டி அதன்மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக்கொடுத்த வாக்காளர்களை கொதி நிலையில் வைத்திருக்கலாம். அதன்மூலம் மேலும் சிறிது காலத்துக்கு நெருக்கடிகளைத் திசை திருப்பலாம்;கடந்து போகலாம். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஹிசாலினியின் மரணம் அரசாங்கத்துக்கு பிரச்சினைகளை கடக்கத் தேவையான ஒரு அவகாசத்தை வழங்கியிருக்கிறது எனலாமா?

இந்த அடிப்படையில் சிந்தித்தால் ரிஷாட் பதியுதீன் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை தன் வீட்டில் வேலைக்கு அமர்த்தியதன் மூலம் தனது அரசியல் வாழ்வை மட்டும் ஆபத்துக்கு உள்ளாகவில்லை.அதைவிட முக்கியமாக நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான உணர்வலைகளை மேலும் அதிகப்படுத்துவதற்கு உதவியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

ஆனால் ஹிசாலினியின் மரணத்துக்குரிய காரணங்களை ரிசாத் பதியுதீனின் வீட்டில் மட்டும் தேடிக் கொண்டிருக்க கூடாது.மாறாக பதின்ம வயது சிறுமி ஒருவரை வேலைக்கு அமர்த்தும் விடயத்தில் இலங்கைத்தீவின் சட்ட ஏற்பாடுகளில் காணப்படும் பலவீனங்கள் எவை எவை என்று பார்க்க வேண்டும்.

இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராகிய பேராசிரியர் முடித்த விதாரண கடந்த வாரம் சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை கவனிக்க வேண்டும். அவர் கூறுகிறார் பதின்ம வயதினரை வேலைக்கு அமர்த்தும் வயதெல்லை 18ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று.

இலங்கையில் 1956ம் ஆண்டின் 47ம் இலக்க சட்டம் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் தொடர்பானது அச்சட்டத்திற்கு அமைவாக பொது நன்மைக்காக 16 வயதுக்கு மேற்பட்டதும் 18 வயதுக்கு இடைப்பட்டதுமான ஆட்களை தொழிலுக்கு அமர்த்தலாம். ஆனால் அது தொடர்பாக தொழில் ஆணையாளருக்கு அவசர நிலை தொடர்பாக அறிவித்த பின்னரே அதனை செய்ய முடியும். இச் சட்டத்தின்படி பாடசாலைக்கு செல்வதை தடுக்கக்கூடாது. அல்லது உடலுக்கு பங்கம் விளைவிக்கும் தொழிலில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்த முடியாது. ஆனால் மேற்படி சட்டத்தை அமுல்படுத்தும் தரப்புக்கள் இதுவிடயத்தில் போதிய அளவுக்கு செயற் படாத வெற்றிடத்தில்தான் ஹிசாலினிகள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

கிடைக்கப்பெறும் தகவல்களின்படி ஹிசாலினி ரிசாத் பதியுதீனின் வீட்டுக்கு வர முன்னரேயே வேறு இடங்களில் வேலை செய்ய தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. வீட்டின் வறுமையே அவர் அவ்வாறு வேலைக்கு போக காரணம் என்றும் கூறப்படுகிறது. அவருடைய தாயார் 30,000 ரூபாய்கள் நுண் கடன் நிதி உதவி பெற்றதாகவும் அந்த 30 ஆயிரம் ரூபாய் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வளர்ந்த போது கடனை அடைப்பதற்கு தன் சிறிய மகளை அவர் வேலைக்கு அனுப்பியதாகவும் ஒரு தகவல் உண்டு. இதுவிடயத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய ஒரு சிறுமியை வேலைக்கு அனுப்பிய பெற்றோரின் பொருளாதார நிலைமையை இங்கு கவனிக்க வேண்டும்.

இதுபோன்ற காரணங்களால் எத்தனையோ ஹிசாலினிகள் இலங்கை முழுவதிலும் பணிப்பெண்களாக வேலைக்குப் போகிறார்கள்.பெண் பிள்ளைகள் மட்டுமல்ல பள்ளிக்குப் போகும் வயதுடைய சிறுவர்களும் பரவலாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். வாகனம் திருத்துமிடங்கள், பட்டறைகள், வியாபார நிலையங்கள், கடற்கரைகளில் இப்பொழுதும் சிறுவர்களை வேலையாட்களாக பார்க்கமுடியும். பள்ளிக்குப் போகும் வயதில் அவர்களை யார் வேலைக்கு அனுப்பியது? அவர்களை யார் வேலைக்கு அமர்த்தியது? அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? அவர்கள் பள்ளிக்கு போகவில்லை என்பதனை யார் கண்டுபிடிப்பது? பள்ளிக்கூடமா? அல்லது சம்பந்தப்பட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களா?

ஹிசாலினி ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறுவதற்கு சில கிழமைகளுக்கு முன்னரே மற்றொரு சிறிய பெண்ணின் கதை வெளிவந்தது. அது இணையத்தில் விற்கப்பட்ட பதினைந்து வயது சிறுமி ஒருவரின் கதை. மிகக் குறுகிய காலத்தில் இலங்கைத் தீவில் இரண்டு பதின்ம வயதுச் சிறுமிகள் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கிறார்கள். இதில் ஹிஷாலினியின் மரணம் அவரைப்போன்ற பதின்ம வயது சிறுவர் உழைப்பாளிகளின் பாதுகாப்பற்ற நிலையை வெளியே கொண்டு வந்திருக்கிது. அதேசமயம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக்கொடுத்த சாதாரண சிங்கள மக்களின் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தியை விரக்தியை கோபத்தை எல்லாவற்றையும் மடை மாற்றுவதற்கும் உதவியிருக்கிறதா?

நிலாந்தன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *